தெறிக்க விட்டு இந்தியா ஒரு நாள் தொடரை வென்றது

          இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி-20 தொடரை இழந்தது.  தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் யாருக்கும் என்பதை நிர்ணயிக்கும் போட்டி நடைபெற்றது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி பகல்-இரவு ஆட்டமாக புனேயில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.


 


 களம் கண்டு முதலில் பேட் செய்த இந்திய அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர்.ரோகித் சர்மா 37 ரன்களும், ஷிகர் தவான் 67 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். கலக்கம் இன்றி ரிஷப் பண்ட் 78 ரன்களும், ஹர்திக் பாண்டியா 64 ரன்களும் பந்துகளை பறக்கவிட்டு எடுத்தனர்  கடைசி கட்டத்தில் ஷர்துல் தாகூர் 30 ரன்களும் அடித்தனர். இதன்மூலம் இந்தியா 48.2 ஓவர்களில் 329 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
 அதன்பின் ஆடிய இங்கிலாந்து 322 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணியில் தொடக்கம் முதலே  விக்கெட் விழுந்தது. டேவிட் மாலன் அரை சதம் அடித்து அவுட்டானார். எனினும் நங்கூரம் போல் நிலைத்துநின்று விளையாடிய சாம் கரன் வெற்றிக்காக கடுமையாக போராடினார். அவர் 95 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனாலும் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணி சார்பில் ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டும் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். மேலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.


இறுதிக்கட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி அசத்தினர். புவனேஷ்வர் குமார் 48வது ஓவரில் 4 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 49வது ஓவரில் 5 ரன்னும், நடராஜன் இறுதி ஓவரில் 6 ரன்னும் விட்டுக் கொடுத்தனர்.

இந்நிலையில், ஆட்டத்தை இறுதிவரை கொண்டு சென்று தனி மனிதனாக போராடிய சாம் கர்ரனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 3 போட்டிகளில் ஒரு சதம், ஒரு அரை சதம் என மொத்தம் 219 ரன்கள் எடுத்த பேர்ஸ்டோவ் தொடர் நாயகன் விருது வென்றார்.