அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிவிப்பு

 


தமிழக தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கிய நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்துள்ளார்.

நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சித்  தலைவியின் எண்ணித்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் புரட்சித் தலைவர் மற்றும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான  அம்மாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்

நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று அம்மா நமக்கு காட்டிய கட்சி ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும். என் மீது  அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள். அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக  இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன்.

நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. புரட்சித்தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

___________________


சசிகலா அவர் மனதில் உள்ளதை சொல்லியிருக்கிறார். இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்வோம்.

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து திரும்பிய சசிகலாவின் வருகை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எல்லாருடைய எதிர்பார்ப்பிற்கும் ஏமாற்றத்தை அளிக்கும் வண்ணம், அரசியலில் இருந்து  விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் சசிகலா அரசியலை விட்டு விலகி விட்டார் என்றும், அவர் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுகவிலேயே எங்களை ஒதுக்கி விட்டார்கள். இதற்கு நிர்பந்தம் காரணம் என நான் சொல்ல மாட்டேன். இந்த முடிவு சசிகலாவின் சொந்த முடிவு. சசிகாலா அதிமுக-வின் பொது செயலாளர் தான். ஆனால், அவர் அதிமுகவை மீட்க போகிறார் என்று நானும் சொல்லவில்லை. 

சசிகலாவும் சொல்லவில்லை. சசிகலா வெளியிட்டுள்ள இந்த அறிக்கை குறித்து இனிமேல்தான் ஆலோசனை நடத்த வேண்டும். சசிகலா அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்