அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக பல இடங்களில் அதிருப்தியாளர்கள் போட்டி

 


அதிமுக கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து பல தொகுதிகளிலும் சொந்த கட்சியினரே போட்டி வேட்பாளர்களாக களத்தில் குதித்துள்ளது, அக்கட்சிகளின் தலைவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

அதிமுக கூட்டணியில் அதிமுக 177, பாமக 23, பாஜ 20, தமாகா 6 மற்றும் கூட்டணி கட்சிகள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிடுகின்றனர். 

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் சீட் கிடைக்காத அதிருப்தியில் பல தலைவர்கள் போட்டி வேட்பாளர்களாக களத்தில் குதித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தற்போதைய எம்எல்ஏ விஜயகுமாருக்கு சீட் கொடுக்காமல், பாமகவுக்கு ஒதுக்கியதால் அவரது ஆதரவாளர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டங்களை நடத்தினர். 

அதை தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி ஒன்றிய மகளிர் அணி செயலாளர் லட்சுமி சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார். 

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில் சிட்டிங் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரனுக்கு சீட் கொடுக்காமல், சந்திரனுக்கு சீட் கொடுத்தனர்.

இதனால் சந்திரசேகரன் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 

அதேபோல, குமாரபாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் தங்கமணியை எதிர்த்து போட்டியிட பாஜ மாவட்ட தலைவர் ஓம் சரவணா நேற்று மனுதாக்கல் செய்துள்ளார். 

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரை எதிர்த்து, அதே கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவுமான தோப்பு வெங்கடாச்சலம் சுயேச்சையாக போட்டியிடுகிறார். 

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக கூட்டணியான தமாகா வேட்பாளர் எஸ்டிஆர்.விஜயசீலனை எதிர்த்து தூத்துக்குடி மேற்கு மண்டல பாஜ முன்னாள் தலைவர் ராஜவேலு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.