கொண்டைக்கடலை தோசை

 


எப்பவும் அரிசி மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? இன்னைக்கு ராத்திரி வெள்ளை கொண்டைக் கடலையை வைத்து, இந்த தோசையை சுட்டு பாருங்கள். 

நிச்சயம் உங்கள் வீட்டில் இருப்பவர்கள் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொண்டைக்கடலை தோசை எப்படி சுடுவது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். 

நாம் பொதுவாகவே  கொண்டைக்கடலையை அவித்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், வித்தியாசமான முறையில் கொண்டைக்கடலை தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

சிம்பிள் டிஷ்! சூப்பர் டிஷ்! ஹெல்தி டிஷ்! எப்படி செய்யறது? இப்பவே தெரிஞ்சுக்கலாம் வாங்க.

தேவையானவை

  • கொண்டைக்கடலை – 2 கப்
  • இஞ்சி – சிறிய துண்டு
  • பூண்டு 2 பல்
  • பச்சை மிளகாய் – 1
  • சீரகம் – அரை டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • அரிசி மாவு – அரை கப்

செய்முறை

முதலில்  தேவையானபொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் கொண்டைக்கடலையை நீங்கள் இந்த ரெசிபி செய்வதற்கு முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

 அடுத்த நாள் காலையில் ஊற வைத்த கொண்டைக்கடலையை மிக்சியில் போட்டு, அதனுள் சிறிய துண்டு இஞ்சி, இரண்டு பல் பூண்டு, பச்சை மிளகாய் ஒன்று, சீரகம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பாக அதை தனியாக ஒரு பௌலில் எடுத்துக்கொள்ள வேண்டும். பின் மீண்டும் ஒரு பெளவுலில் அரிசி மாவு அரை கப் எடுத்து,  சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ள வேண்டும்.

இந்த மாவை கொண்டை கடலை கலவையில் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். 

அதன் பின் அடுப்பில் தோசை சுடும் பாத்திரத்தை வைத்து, அதனுள் தோசை ஊற்றி தயார் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

இந்த தோசை நமது உடலுக்கு பல வகையான சத்துக்களை வழங்குவதோடு, வித்தியாசமான முறையில், நம் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுக்கும்போது அது அவர்களுக்கு பிடித்தமானதாகும். 

இந்த தோசைக்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, பூண்டு சட்னி என எதை வைத்து சாப்பிட்டாலும் மிகவும் சுவையாக காணப்படும். இப்போது கொண்டைக்கடலை தோசை தயார்.

சுவையான கொண்டைக்கடலை தோசை தயார்

இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை  செய்திகள் குழுவின்  சமையல்  பயணம் தொடரும்.

வணக்கம் அன்புடன் கார்த்திகா