சென்னை: மெட்ரோ ரயிலில் அதிகபட்ச கட்டணமான 70 ரூபாயை 50 ரூபாயாக ஆக குறைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் கட்டணத்திலிருந்து 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
சாமானிய மக்களும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயிலின் கட்டணத்தை குறைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.
அதாவது 0 - 2 கிமீ வரை கட்டணம் ரூ.10 எனவும், 2 முதல் 4 கிமீ வரை கட்டணம் ரூ. 20 ஆக தற்போது உள்ள நிலையில், இனி 2 முதல் 5 கிமீ வரை பயணக்கட்டணம் கட்டணம் ரூ. 20 ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 முதல் 12 கிமீ வரை பயணக்கட்டணம் ரூ.30 ஆக இருந்த நிலையில் இனி, 5 கிலோ மீட்டர் தூரம் முதல் 12 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க கட்டணம் ரூ.30 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 கி.மீ முதல் 18 கி மீ வரை பயணிக்க கட்டணம் ரூ. 50 ஆக இருந்த நிலையில் இனி 12 கிலோ மீட்டர் தூரம் முதல் 21 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க கட்டணம் ரூ.40 ஆக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
18 முதல் 24 கிமீ தூரம் வரை கட்டணம் ரூ.60, 24 கிமீ மேல் கட்டணம் ரூ.70 என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 21 முதல் 32 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க கட்டணம் ரூ.50 ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பயணிக்கும் பயணிக்ளுக்கு ரயில் பயண கட்டணத்திலிருந்து 50% தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு வரும் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.