மகராஷ்டிராவின் நிலைதான் தமிழகத்திலும் -சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை

 



கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத பட்சத்தில், மகராஷ்டிராவில் ஏற்பட்ட நிலைதான் தமிழகத்திலும் ஏற்படும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வந்தாலும், மக்கள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா விதிமுறைகளை  கடைபிடிப்பதில் இருந்து தவறி வருகின்றனர். 

இந்நிலையில், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள், இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக 450-க்கும் குறையாமல் கொரோனா தொற்று உறுதியாகி வருவதாகவும், சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஒரே நேரத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது அதிகளவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 0.48 சதவீதத்துக்கும் கீழ் இருந்தாலும், தற்போதைய நிலை அச்சம் தருவதாக உள்ளதாகவும், மக்கள் முக கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல் மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை நிறுத்திவிட்டது தனக்கு அதிருப்தி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத பட்சத்தில், மகராஷ்டிராவில் ஏற்பட்ட நிலைதான் தமிழகத்திலும் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.