திமுக கழகத்தின் செய்தித்தொடர்பு இணைச்செயலாளராக ராஜீவ் காந்தி நியமனம்

 திமுக கழகத்தின் செய்தித்தொடர்பு இணைச்செயலாளராக வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை நியமனம் செய்து அக்கட்சி அறிவித்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையில் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அக்கட்சியின் தலைவர் சீமானுக்கும், ராஜீவ் காந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து விலகியதாக கூறப்பட்டது.

இதனையடுத்து, கடந்த ஜனவரி 28-ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி இணைந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு திமுகவில் இணைந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை செய்தித்தொடர்பு இணைச்செயலாளராக திமுக கழகம் நியமனம் செய்துள்ளது.

மேலும், துணை செயலாளராக கா.முத்தரசன் என்பவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, நியமிக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து இவர்களும் பணியாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.