ஐபிஎல் ஏலத்தில் புதிய சாதனை

 


ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் கேட்கப்பட்ட வீரர் என்ற பெருமையை தென் ஆப்ரிக்கா வீரர் கிறிஸ் மோரிஸ் பெற்றுள்ளார். 

அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16.25கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.


ஐபிஎல் போட்டியின்  14வது தொடருக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் நேற்று சென்னையில்  நடந்தது. 

ஏற்கனவே 8 அணிகளும் ஏலத்தில் பங்கேற்க வசதியாக கடந்த மாதம் 139 வீரர்களை தக்க வைத்தன. மேலும் 57 வீரர்களை விடுவித்தன.  

எனவே ஏலத்தில் பங்கேற்க  பதிவு செய்திருந்த  1,114 வீரர்களில் இருந்து 292 பேரை ஏலம் கேட்க அனுமதிக்கப்பட்டது. 

வீரர்களின் அடிப்படை விலையாக குறைந்தபட்சம் 20 லட்ச ரூபாய் முதல் அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

முதல் வீரராக  கருண்நாயர் ஏலம் விடப்பட்டார். அவரது அடிப்படை விலை 50லட்சம். 

ஆனால் யாரும் ஏலம் கேட்கவில்லை.ஆனால் அடுத்த சுற்றில் அடிப்படை விலைக்கு கொல்கத்தா வாங்கியது.

ராஜஸ்தான் அணி விடுவித்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித்தை ஏலத்தில் எடுக்க பெங்களூர், டெல்லி அணிகள் போட்டியிட்டன. 

அதில் டெல்லி அவரை 2.2கோடிக்கு(அடிப்படை விலை 2கோடி) ஏலம் எடுத்தது.

முதல் சுற்றில் ஏலம் போகாத  கேதர் ஜாதவ், ஹர்பஜன் சிங் ஆகியோரை 2வது சுற்றில்  அடிப்படை விலையான 2 கோடிக்கு  ஐதராபாத், கொல்கத்தா அணிகள் ஏலத்தில் எடுத்தன.

ஷாருக்கான் முதலில் ஏலம் விடப்பட்டார். அவரை ஏலத்தில் எடுக்க பல அணிகள் போட்டியிட பஞ்சாப் அணி 5.25கோடிக்கு ஏலம் எடுத்தது. ஏலத்திற்கு பிறகு பஞ்சாப் சமூக ஊடகங்களில் ‘ஷாருக்கானே நம்ம பக்கம்’ என்ற அர்த்தத்தில் நடிகரும், கொல்கத்தா அணியின் உரிமையாளருமான ஷாருக்கானின் படத்தை போட்டு ‘ஜாலி’யாக’ டிவிட் செய்துள்ளது.


* சையத் முஷ்டாக் அலி இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற மணிமாறன் சித்தார்த் அடிப்படை விலையான 20 லட்சத்துக்கு டெல்லி அணி வாங்கியுள்ளது. 

மற்றொரு தமிழக வீரர் செழியன் ஹரிநிஷாந்தை 20 லட்சத்துக்கு சென்னை வாங்கியுள்ளது.


* டிஎன்பிஎல், உள்நாட்டு தொடர்களில்  சிறப்பாக விளையாடியும் ஜி.பெரியசாமிக்கு முதல் சுற்று ஏலத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை.