பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்

 


விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பட்டாசு ஆலையில் 40-க்கும் மேற்ப்பட்ட அறைகள் உள்ளன. அதில், இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் தங்கள் பட்டாசு தயாரிக்கும் பணிகளை செய்து கொண்டு இருந்தனர்.

அப்போது, மருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பட்டாசு ஆலையில் இன்று 70-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், பட்டாசு கடை உரிமையாளர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமரை தொடர்ந்து, உயிரிழந்த குடும்பத்திற்கு தலா  ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், முக ஸ்டாலினும் தற்போது இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

ஸ்டாலின் பதிவில், சாத்தூர் – அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பள்ளி மாணவி உட்பட 15பேர் பலியான செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் என்றும் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் எனவும் ட்வீட் செய்துள்ளார். 

மேலும்,  உயிரிழப்புக்கு போதிய நிவாரணமும், விபத்துகள் தொடராமல் தடுப்பதும் அவசியம் என்றும் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.