சசிகலா உடல் நலம் பெற்று தங்களுடைய பங்களிப்பை அரசியலில் காட்ட வேண்டும் என உ.தனியரசு எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏவும் கொங்கு இளைஞர் பேரவையின் அமைப்பாளருமான உ.தனியரசு சசிகலாவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று கூறியுள்ளார்.
மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நேசத்திற்குரிய சசிகலா இயன்ற அளவு கடமையாற்றியுள்ளார் என்றும் சசிகலா உடல் நலம் பெற்று தங்களுடைய பங்களிப்பை அரசியலில் காட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழகம் வந்தபோது, கார் கொடுத்து உதவிய கிருஷ்ணகிரி அ.தி.மு.க நிர்வாகி சம்பங்கி உள்பட சுமார் 8 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்தாலும் தனியரசுவின் இந்தச் சந்திப்பு விவரம், விவாதப் பொருளாக மாறியுள்ளது.