எடப்பாடி தொகுதியில் போட்டியிட இமான் அண்ணாச்சி விருப்ப மனு தாக்கல்

 


எடப்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட பிரபல நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக -அதிமுக கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். 

அதேபோல் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, தாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் விருப்ப மனுவை விநியோகம் செய்ய தொடங்கியுள்ளன. விருப்ப மனுக்களை பெற்று அந்தந்த கட்சி தொண்டர்கள் மிகவும் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வந்தனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது

சட்டமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் விருப்ப மனு வினியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும், சேப்பாக்கம் தொகுதியில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கட்சி நிர்வாகிகள்  மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட பிரபல நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.