இன்று ஒரு ஆன்மிக தகவல்

கவலைகள் தீர... எதிரிகள் விலக... முருகப்பெருமானை இவ்வாறு வணங்குங்கள்...!!

நம் வாழ்க்கையில் அனுதினமும் ஏதேனும் ஒரு பிரச்சனைகளையும் அதனால் மனக்கவலைகளையும் சந்தித்து கொண்டேதான் இருக்கிறோம். இந்த பிரச்சனைகளும், கவலைகளும் தீர செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வணங்கினால் போதும்.

சஷ்டி அல்லது சட்டி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். 

இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.

அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் ஆறாவது திதி சட்டி ஆகும். 

ஷட் எனும் வடமொழிச் சொல் ஆறு எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் ஆறாவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 

30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் ஆறாம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் ஆறாம் நாளுமாக இரண்டு முறை சட்டித் திதி வரும். 

அமாவாசையை அடுத்துவரும் சட்டியைச் சுக்கில பட்சச் சட்டி என்றும், பூரணையை அடுத்த சட்டியைக் கிருட்ண பட்சச் சட்டி என்றும் அழைக்கின்றனர்.

இந்த நாளில் தீமைகள் விலகி மங்கலம் உண்டானதால் சஷ்டி விரதம் முக்கிய விரத நாளாக போற்றப்படுகிறது.

“விரதங்கள் எல்லாமே மனதை ஒருமுகப்படுத்தத்தான் ஞானிகளால் உருவாக்கப்பட்டது. விரதம் என்றாலே 'வரிக்கப்படுவது' அல்லது 'மேற்கொள்வது' என்றுதான் அர்த்தம். 

மனம் போனபடி செல்லும் புலன்களை அடக்கத்தான் இந்த விரதங்கள் பயன்படுகின்றன. 

மனதினை அடக்க ஒரு நல்ல வழி உண்டி சுருக்குதல்தான். அதிலும் விரத நாள்களில் உண்டியை நீக்குதல் இன்னும் சிறப்பானது. வாகனங்களுக்கு ஓய்வு கொடுத்து பழுது பார்ப்பது போல, உடலின் உள்ளுறுப்புகளுக்கும் இந்த விரதங்கள் நன்மை செய்கின்றன.

விரதங்களில் வார விரதம், நாள் விரதம், பட்ச விரதம் என்று மூன்று வகை உண்டு. 

வியாழன், சனி போன்ற ஏதாவது ஒரு நாள் இருக்கும் விரதம் வார விரதம் எனப்படும்.

மாதத்தின் ஏதாவது ஒரு நாள் உதாரணமாக அமாவாசை, பௌர்ணமி தினத்தில் விரதம் இருப்பது நாள் விரதம். 

மாதத்தின் இரு நாள்கள் ஏதாவது ஒரு திதியில் உதாரணமாக சஷ்டி, பிரதோஷம் நாள்களில் இருப்பது பட்ச விரதம் எனப்படுகிறது. 

இதில் சஷ்டி விரதம் சிறப்பானது. 'சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்'  என்ற பழமொழியின் உண்மையான விளக்கமே சஷ்டியில் விரதம் இருந்தால் அகமென்னும் பை சிறப்பானதாக மாறும் என்பதுதான். 

இன்னொருவகையில் கூடச் சொல்லலாம். பிள்ளைப்பேறு இல்லாத பெண்கள் சஷ்டியில் விரதம் இருந்தால் அவர்களின் அகமென்னும் கருப்பையில் கரு வரும். இப்படிச் சிறப்புமிக்க சஷ்டி விரதம் காலம் காலமாக நம்மிடம் இருந்து வருகிறது.

'சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை! சுப்பிரமணிய சுவாமிக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை" என்று கூறுவார்கள்..!!

நம் வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் இருந்தாலும் அவைகள் யாவும் நொடியில் நீங்கி, பகைவர்கள் ஒழிந்து முன்னேற்றம் உண்டாக, தன்னம்பிக்கை அதிகரிக்க இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அதை எப்படி உச்சரிக்கலாம்? என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்...

எவ்வாறு வழிபடுவது? 

ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமையில் முருகனுடைய வேல்-ஐ வைத்து அதற்கு வழிபாடுகள் செய்து கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும்... எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் உடனே நீங்கும் என்பது ஐதீகம். 

செவ்வாய்க்கிழமையில் வீடு, பூஜையறை போன்றவற்றை சுத்தம் செய்து, முருகன் படத்திற்கு வாசனை மலர்களால் மாலை சாற்றி, அவருடைய வேல்-ஐ சுத்தம் செய்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு கொள்ள வேண்டும். 

ஒரு சிறிய கிண்ணத்தில் பச்சரிசி நிரப்பி அதில் வேலை சொருகி வைக்க வேண்டும். பின்னர் தூப, தீப, ஆராதனைகள் காண்பித்து கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இப்படி உச்சரித்து வந்தால் வாழ்க்கையில் இருக்கும் தீராத துன்பங்களும் ஒன்றுமே இல்லாமல் போய்விடும். 

ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா ஸ்லோகம்: 

எனது சங்கடங்கள் அனைத்தும் விலகிடச் செய்வாய் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா! 

நவகிரகங்கள் ஒன்பதும் நன்மையே அருளச் செய்வாய் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா! 

சகல விதமான தோஷங்களும் என்னை விட்டுப் போகட்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா! 

எல்லா விதமான வருத்தங்களும் என்னை விட்டு அகல வேண்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா! 

துக்கங்களிலிருந்து நிவாரணம் எனக்குக் கிடைக்கட்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா! 

என்னுடைய தாபங்கள் தீர்ந்து விட அருள் செய்வாய் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா! 

பாவங்கள் என்னிடம் நெருங்காமல் போகட்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா! 

என்னை வாட்டுகிற நோய்கள் உடலை விட்டு ஓடிவிடட்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!

எதிரிகள் என்னை விட்டு விலகிப் போவார்களாக ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!

உடல் சார்ந்த நோய்கள் தீர்ந்து போகட்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா! 

என்னைச் சுற்றுகிற பீடைகள் மறைந்து விடட்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா! 

எனக்கு பயம் என்பதே இல்லாமல் போக வேண்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா! 

தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் தோறும் இது போல் வீட்டில் செய்து வந்தால் வேலாயுதத்தின் சக்தியால் நம்மை சுற்றியுள்ள அத்தனை பிரச்சனைகளும் நீங்கி நமக்கு நல்ல ஒரு பாதை பிறக்கும்.

இந்து சமயத்தினர்க்கு உரிய சிறப்பு நாட்கள் பல திதிகளை அடிப்படையாகக் கொண்டே வருகின்றன. இது முருகனுக்குரிய சிறப்பு நாளாகும். சட்டித் திதியில் வரும் பண்டிகைகளும், விரதங்களும் பின்வருமாறு:

கந்தசஷ்டி விரத நிறைவு: ஐப்பசி மாத வளர்பிறைச் சஷ்டித் திதி.

விநாயகருக்கான கார்த்திகைச் சட்டி 21 நாள் விரத நிறைவு. மார்கழி வளர்பிறைச் சஷ்டித் திதி. 

கபிலா சஷ்டி என்பது பாத்ரபத மாதத்தில் தேய்பிறையில் வருகின்ற சஷ்டிதிதியாகும்.  

இந்த நாள் சந்திரனுடைய சஞ்சாரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இந்நாளில் விருப்ப தெய்வத்திற்கும், பசுவிற்கும் பூசை செய்தல் சிறப்பாகும். பசுவிற்கு புற்கள் போல உணவிடுதலும் நன்மை தரும்.

இந்த சஷ்டி நாளில் முடிந்த வரை உண்ணாநோன்பிருந்து எல்லாம் வல்ல முருகப்பெருமானின் ஆசியைப் பெற்றுக்கொள்ளுங்கள்" 

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 

ஓம் நமசிவாய

மோகனா செல்வராஜ்