சமூக நீதிக்குச் சாவுமணி – வைகோ கடும் கண்டனம்

 


தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்களை, மத்திய அரசுப் பணிகளில் நேரடியாக நியமனம் செய்யும் ஆபத்தான போக்குக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel & Training) சார்பில், பிப்ரவரி 5 ஆம் தேதி மத்திய பொதுப் பணித் தேர்வு ஆணையம் (UPSC) ஒரு குறிப்பு ஆணையை வெளியிட்டு இருக்கின்றது. 

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பதவிக்கு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்; 

மூன்று இணைச் செயலாளர்கள் (Joint Secretary) மற்றும் 27 இயக்குநர் பதவிகளுக்கு முறையே 15 வருடங்கள் மற்றும் 10 வருடங்கள் பணியாற்றிய பயிற்சி இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று யூ.பி.எஸ்.சி. குறிப்பு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மேலாண்மைப் பொறுப்புகளில் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரங்களின் ஆதரவாளர்கள், சிந்தனையாளர்கள் குழாமைச் சேர்ந்தவர்களை, குறுக்கு வழியில் நியமனம் செய்திட பா.ஜ.க. அரசு முனைந்து வருகின்றது. தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்களை, மத்திய அரசுப் பணிகளில் நேரடியாக நியமனம் செய்யும் ஆபத்தான போக்குக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றேன். 

இதனை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.சமூக நீதியை மறுக்கும் வகையில் மத்திய அரசுப் பொறுப்புகளில் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தோரை நேரடியாக நியமனம் செய்யும் வகையில், மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள குறிப்பு ஆணையை உடனே இரத்துச் செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.