வரும் 15-ம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில்களில், அனைத்து நேரங்களிலும் மாணவர்கள் பயணிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
ரயில்களில் பயணிக்க மாணவர்களின் அடையாள அட்டை அவசியம் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, கொரோனா காரணமாக சென்னை புறநகர்களில் ஓடும் மின்சார ரயில்கள் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதி முதல் நிறுத்தப்பட்டன.
பின்னர் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்ட போது, சென்னை புறநகர் ரயில் சேவைக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
முதல் கட்டமாக அரசு ஊழியர்களுக்கும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் 9,10,11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதுபோன்று அனைத்துக் கல்லூரிகளும் நீண்ட மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக வரும் 15-ம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில்களில் மாணவர்கள் பயணிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.