செய்திகள்

 


சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதல்வர் வீடு அருகே முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும் பணி நியமனம் வழங்காததால் முதல்வர் வீட்டை முற்றுகையிட வந்ததாக பேட்டி அளித்துள்ளனர்.

***************************

மேட்டுப்பாளையத்தில் நேற்று நடந்த பாஜக கூட்டத்தில் கல்வீசியதாக எஸ்.டி.பி.ஐ கட்சியினர் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகி நௌபல், மேட்டுப்பாளையம் நகர தலைவர் ஜூபைர் அலி கைது செய்யப்பட்டுள்ளார். மேட்டுப்பாளையத்தில் பாஜக பிரமுகர் கல்யாண ராமன், முஸ்லிம்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

********************************

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6866 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 16-வது நாளான இன்று, தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியை 6734 பேர், கோவாக்ஸின் தடுப்பூசியை 132 பேர் போட்டுக்கொண்டனர்.

****************************************

மராட்டியத்தில் யவத்மால் மாவட்டம் காப்சிகோப்ரி கிராமத்தில் 12  குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதில் சானிடைசர் கொடுக்கப்பட்ட அலட்சியம் நடந்துள்ளது. ஊழியர்கள் போலியோ சொட்டு மருந்துக்கு பதில் கைகழுவும் சானிடைசரை 12 குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 12 குழந்தைகளும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படடனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக 3 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

*************************************

மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் இறந்த 18 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். துயர சம்பவங்களில் உயிரிழந்த 18 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிச்சாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

**************************************

செங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சங்கீதாவை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி கண்ணன் உத்தரவிட்டுள்ளார். குடும்பத்தகராறில் கணவர் யுவராஜ் தற்கொலை செய்த நிலையில் உறவினர்கள் புகார் தந்ததால் எஸ்.பி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

****************************

ராமேஸ்வரம் புனித தீர்த்தங்களில் இன்று முதல் பக்தர்கள் நீராட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் இன்று முதல் பக்தர்கள் நீராட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

*******************************

மதுரை அருகே கட்டடம் இடிந்து மூவர் உயிரிழந்த விவகாரத்தில் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை வடம்போக்கி தெருவில் கட்டுமானப்பணியின் போது கட்டடம் இடிந்து மூவர் உயிரிழப்பு - கட்டட உரிமையாளர், ஒப்பந்ததாரர் உள்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.

************************

சமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த பெண்ணுக்கு அரசு பணி வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தரவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

கோயில் வளாகத்தில் யானை தாக்கியதால் கோயில் நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. சரிவர பராமரிக்காததால் கோயில் யானை தாக்கியதற்கு இழப்பீடு மற்றும் அரசு பணி தர உத்தரவிடக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

*****************************