மாட்டு பொங்கல் திருநாள்

 


மாட்டு பொங்கல் திருநாள் :

மாட்டுப்பொங்கல் அன்று, காலை வேளையில் சிவாலயங்களுக்குச் சென்று நந்தி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். 

எல்லா விதமான மாலைகளையும் சூட்டி (உணவு மாலை, பண மாலை, பூ மாலை, சந்தன மாலை, ஏலக்காய் மாலை, வெற்றிலை மாலை, வடை மாலை, பழ மாலை) நந்தியை அலங்கரித்து வைத்திருப்பர். அவரை தரிசிப்பது மிகவும் நல்லது. 

நந்தி பதிகம் பாடினால் நலம் கிடைக்கும்; வளம் சேரும்.

வீட்டுப் பொங்கலுக்கு மறுநாள், மாட்டுப்பொங்கல் வைத்துக் கொண்டாட வேண்டும். 

பொங்கல் வைத்து கோ பூஜை செய்து வழிபட உகந்த நேரமாகும். மாடுகளுக்கு கண்டிப்பாக பொங்கல் நைவேத்தியம் வழங்க வேண்டும். இதன் மூலம் லட்சுமி கடாட்சம் பெருகும்.

அன்றைய தினம் மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரித்து மாடுகளின் கழுத்தில் பூமாலையும், கரும்பு மாலையும் கட்டி வழிபடுவது நல்லது. 

நைவேத்தியத்தில் கொஞ்சம், நம் குடும்ப உறுப்பினர்களும் சாப்பிட வேண்டும். அப்பொழுது தான் சலிக்காது உழைத்து வாழும் குணம் நம்மை வந்து சேரும். 

நமக்கு உற்ற தோழனாய் இருந்து உன்னத வாழ்விற்கு அடிகோலும் மாடுகளை வணங்கி மகிழ்வோம். மாடுகளை வீதியில் அழைத்துச் செல்லும்பொழுது மங்கல ஓசை முழங்கவேண்டும் அல்லது சங்கு ஊதி தீபாராதனை காட்டவேண்டும். நிறைவாக சூறைத்தேங்காய் உடைத்து திருஷ்டி கழிக்கவேண்டும்.

மாட்டுப் பொங்கல் வைத்து வழிபட உகந்த நேரம் :

காலை 06.00 மணி முதல் 09.00 மணி வரை

நண்பகல் 01.35 மணி முதல் 02.05 மணி வரை

மாலை 05.30 மணி முதல் 06.30 மணி வரை

இரவு 08.30 மணி முதல் 09.30 மணி வரை 

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கிய இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறும் நாளே மாட்டு பொங்கலாகும். 

இந்நாள் தைப்பொங்கலுக்கு மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இது பட்டிப்பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. 

மக்களின் வாழ்வில் ஒன்றிய கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லா தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

கால்நடைகளை அழகுப்படுத்துதல் :

மாட்டு பொங்கல் அன்று தொழுவத்திலேயே பொங்கல் வைத்து கற்பூர தீபாராதனை காட்டுவார்கள். 

இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள். கால்நடைகளுக்கு பொங்கல் கொடுக்கும்போது பொங்கலோ பொங்கல்! மாட்டு பொங்கல்! பட்டி பெருக! பால் பானை பொங்க! நோவும் பிணியும் தெருவோடு போக! என்று கூறுவார்கள். 

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும்.

இப்போதும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.

ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவது ஜல்லிக்கட்டு விளையாட்டின் முக்கிய அம்சமாகும்.

வாழ்க வளமுடன் நன்றி