தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்-ரஜினி சாட்சியம் அளிக்க சம்மன்

 






நாட்டையே உலுக்கிய இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்தது. இந்த ஒரு நபர் ஆணையம் ஏற்கெனவே 23 கட்ட விசாரணையை முடித்துள்ளது.

இந்நிலையில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் 24-ம் கட்ட விசாரணை தூத்துக்குடி தெற்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஆணைய முகாம் அலுவலகத்தில் 18.01.2021 தொடங்கியது. 

இந்த விசாரணை வரும் 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஆஜராக மொத்தம் 56 பேருக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்த அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள், தீயணைப்புப் படையைச் சேர்ந்தவர்களுக்கு இம்முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. 

இதில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் அப்போதைய டீன் (DEAN) உள்ளிட்டோர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

இந்த விசாரணையில் 19.01.2021 நடிகர் ரஜினி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. 

சம்மனை ரஜினி பெற்றுள்ளார். ஆனால், அவர் நாளை நேரில் ஆஜராவாரா அல்லது வழக்கறிஞர் மூலம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வாரா என்பது தெரியவில்லை. 

இதே நேரத்தில் ரஜினி தனது உடல்நிலையைக் காரணம் காட்டி நாளை நேரில் ஆஜராகமாட்டார். தனது வழக்கறிஞர் மூலம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.