யாருடன் கூட்டணி - குழப்பத்தின் உச்சத்தில் பா.ம.க

 சட்டப்பேரவை தேர்தல் என்றாலும் சரி, அது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் என்றாலும் சரி, பிரதான அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் மூன்றாம் நிலை, நான்காம் நிலை மற்றும் சிறு சிறு கட்சிகள் கடைசி நேர சவாரியை மட்டுமே விரும்பும். இதில் அவசரப்பட்டு பந்திக்கு யாரும் முந்திக்கொள்ள மாட்டார்கள்.

கடைசியாக பிரதான அணிகளில் கூட்டு சேருபவர்களுக்கு மட்டுமே அறுசுவை விருந்து அளிப்பது மாதிரியான மதிப்பும், மரியாதையும் அதிகமாக கிடைக்கும். சீட்டும் வளமாக வந்து சேரும். முதலிலேயேபோய் ஒட்டிக் கொள்பவர்களுக்கு பழைய சோறுதான் பரிமாறப்படும் என்பது அரசியலில் எழுதப்படாத விதி.

சில நேரங்களில் இந்த முடிவு பாமகவுக்கு வெற்றியையும், சில நேரங்களில் தோல்வியையும் தந்திருக்கிறது என்பதை, அதன் கடந்த கால தேர்தல் வரலாறு மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆனால், பாமகவின் இந்த பாரம்பரிய அணுகுமுறை தற்போது நிச்சயமாக மாறி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

தமிழகத்தில் மிகப் பெரிய ஆளுமை சக்திகளாக திகழ்ந்த ஜெயலலிதா, கருணாநிதி இருவரும் இல்லாத நிலையில் பாமகவின் இந்த நிலைப்பாடு அரசியல் விமர்சகர்களால் புதிய கோணத்தில் பார்க்கப்படுகிறது. தற்போது வரை அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக, இருப்பதைப் போலவே பாமகவும் இடம் பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், அதிமுகவுடன் கூட்டணி தொடர பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த மாதம் ஒரு புதிய நிபந்தனையை வைத்தார். அதாவது வன்னியருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதே அந்த நிபந்தனை. இதற்கு ஒப்புக்கொண்டால் அதிமுகவுடன் கூட்டணி என்று வெளிப்படையாகவே டாக்டர் ராமதாஸ் அறிவித்துவிட்டார்.