செல்போன்கள் திருட்டு வழக்கில் கைதான சத்தியராஜ்

 



சென்னை வடபழனி, குமரன் காலனி, 6-வது தெருவைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவரின் மனைவி அனிதா (42). இவரின் அம்மா, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவருகிறார். 

கடந்த 28.11.2020-ல் அம்மாவுக்கு டயாலிசிஸ் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டிலிருந்து வேறு அறைக்கு அனிதா அழைத்துச் சென்றார். அப்போது வார்டில் தன்னுடைய கைப்பை, செல்போனை வைத்திருந்தார்.

சிகிச்சை முடிந்தபிறகு வார்டுக்கு வந்தபோது அனிதாவின் கைப்பை, செல்போன் திருட்டுப் போயிருந்தது. வார்டில் தேடியும் கிடைக்கவில்லை. 

அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோதும் எந்தத் தகவலும் தெரியவில்லை. இதையடுத்து அனிதா, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

பின்னர் அனிதாவின் செல்போன் ஐஎம்இஐ நம்பர் மூலமாகவும் செல்போனைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். அதற்காக பூக்கடை காவல் மாவட்டத்தில் செயல்படும் சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை போலீஸார் நாடினர். சைபர் க்ரைம் போலீஸார் திருட்டுப்போன அனிதாவின் செல்போன் ஐஎம்இஐ நம்பர் மூலமாகவும் சிக்னல் மூலமாகவும் ஆய்வு செய்த போது செல்போனைத் திருடியவர் குறித்த விவரம் தெரியவந்தது.

அவர் குறித்த தகவலை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை போலீஸாருக்கு சைபர் க்ரைம் போலீஸார் கூறினர். உடனடியாக போலீஸார் புளியந்தோப்பு, நரசிம்மநகர் பகுதியில் பதுங்கியிருந்த சத்தியராஜ் என்பவரைப் பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சத்தியராஜின் கூட்டாளியான ஒருவர் மீது செல்போன் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தொடர்ந்து சென்னை அரசு மருத்துவமனைகளில் செல்போன்கள் திருட்டு நடந்ததால் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தோம். அப்போது சத்தியராஜ் மற்றும் அவரின் கூட்டாளி ஆகியோர் செல்போன்களைத் திருடிக்கொண்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதன்மூலம் சத்தியராஜைக் கைது செய்திருக்கிறோம்.

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தங்கியிருப்பவர்களின் விலை உயர்ந்த பொருள்கள், செல்போன்கள், பணம் ஆகியவற்றை சத்தியராஜ் மற்றும் அவரின் கூட்டாளிகள் திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிகளவில் இந்தக் கும்பல் செல்போன்களைத் திருடியது தெரியவந்திருக்கிறது. சத்தியராஜிடமிருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 42 செல் போன்களைப்  பறிமுதல் செய்திருக்கிறோம். 

சத்தியராஜின் கூட்டாளிகளைத் தேடிவருகிறோம். செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கைதான சத்தியராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம்’’ என்றார்.

சத்தியராஜிடம் அரசு மருத்துவமனைகளில் எப்படித் திருடுவாய் என்று போலீஸார் விசாரித்தபோது, `சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர்கள் நேரம் எப்போது என்று எனக்குத் தெரியும். அந்தச் சமயத்தில் பார்வையாளர்களைப் போல வார்டுகளுக்குள் செல்வேன். 

அப்போது சார்ஜரில் போடப்பட்டிருக்கும் செல்போனை நைசாக எடுத்துக் கொண்டு வந்துவிடுவேன். இதுதவிர நோயாளிகளைக் கவனிப்பவர்களில் பலர் மனவேதனையில் இருப்பார்கள். அதனால் அவர்கள், தாங்கள் வைத்திருக்கும் செல்போன்கள் மீது அதிக கவனமாக இருக்க மாட்டார்கள். அதைத் தெரிந்துக் கொண்டு செல்போன்கள், ஹேண்ட் பேக்கை திருடிக் கொண்டு வந்துவிடுவேன்' என்று கூலாகக் கூறியதாகச் சொல்கிறார்கள் போலீஸார்.