குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் வரலாறு
இந்துமத வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நவக்கிரகங்களில் ஒன்றாகவும், சில வழிபாட்டுத் தலங்களில் துணைக் கோவிலாகவும் கொண்டு எழுந்தருளியிருக்கும் சனீஸ்வர பகவான் தமிழகத்தில் தனக்கென தனிக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஒரே இடம் குச்சனூர்தான்.
சனீஸ்வர பகவான் எல்லா கோவில்களிலும் சனி பகவான் நவக்கிரகத்தில் ஒருவராகத்தான் காட்சி தருகின்றார்.
திருநள்ளாறுக்கு அடுத்தபடியாக, தனியாக ஒரு கோவில் இருக்கிறது என்றால் அது இந்த குச்சனூர் சனிபகவான் கோவில் தான்.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபிநதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் இந்தக் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அமைந்திருக்கிறது.
சனி தோசம் உடையவர்கள் இந்தக் கோவிலிற்கு வந்து மனமுருக வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு வரும் சோதனைகள் நீங்கி வாழ்க்கையில் வளம் பெற முடியும்.
மேலும் தாங்கள் தொடங்கும் புதிய தொழில் வளர்ச்சி அடையவும், வணிகம் பெருகவும், குடும்பத்தினர் நலமுடன் வாழவும் இவரது துணை வேண்டுமென்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வணங்கிச் செல்கின்றனர்.
தற்போது இந்தியாவின் பிற பகுதிகளிலிலிருந்தும், இலங்கை, சிங்கப்பூர், நேபாளம் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் இந்து சமய நம்பிக்கையுடையவர்கள் இந்த சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வந்து தங்கள் குறைகள் தீர்ந்திட வேண்டிச் சென்று கொண்டிருக்கின்றனர்.
இங்குள்ள சனிபகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து நீக்கியதாக வரலாறு கூறுகின்றது.
சனி பகவான் இங்கு சுயம்புவாக அருள் பாவிப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு.
இங்கு காகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த கோவிலில் பூஜை முடிந்தவுடன் பிரசாதமானது முதலில் காகத்திற்கு தான் வைக்கப்படும். காகம் எடுக்காவிட்டால் அது அபசகுனமாக கருதப்பட்டு, பூசாரிகள் சனீஸ்வரபகவானிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் பிரசாதத்தை காகத்திற்கு வைப்பார்கள்.
காகம் பிரசாதத்தை உண்டால் தான் பூஜை நிறைவடைந்ததாக அர்த்தம்.
பின்புதான் பிரசாதத்தை பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள். எள் பொங்கல் வைப்பது இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு.
தல வரலாறு:
பல நூற்றாண்டிற்கு முன்பு தினகரன் என்ற மன்னன் வாழ்ந்து வந்தான். அந்த மன்னனுக்கு வெகுநாட்களாக குழந்தை பிறக்காமல் இருந்தது.
குழந்தை வரம் வேண்டி இறைவனை தினம்தோறும் பூஜித்து வந்தான். அப்போது ஒரு அசரீரி குரல் ஒலித்தது.
‘உன் வீட்டிற்கு பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான். அவனை நீ பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தால் உனக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று கூறியது’.
மன்னனும் அவன் வீட்டிற்கு வந்த பிராமண சிறுவனினை வளர்த்து வந்தான். மன்னனுக்கு அசரீரி குரல் ஒலித்தபடி குழந்தை பிறந்தது. மன்னனுக்கு பிறந்த குழந்தைக்கு சதாகன் என்ற பெயரிட்டு வளர்த்து வந்தான்.
வளர்ப்பு மகனின் பெயர் சந்திரவதனன். ஆனால் மன்னனுக்கு பிறந்த குழந்தையை விட, வளர்ப்பு மகனான சந்திரவதனனுக்கு அதிகமான அறிவாற்றலும், திறமையும் இருந்தது.
இதனால் மன்னனின் முதல் வாரிசான சந்திரவதனனுக்கே முடிச்சூட்டப்பட்டது. அந்த சமயம் மன்னன் தினகரனுக்கு ஏழரைச்சனி பிடித்தது. ‘வளர்ப்பு மகனாக இருந்தாலும் எனக்கு முடிசூட்டிய என் தந்தைக்கு சனி பகவானின் தாக்கம் இருக்கக்கூடாது’ என்ற எண்ணம் சந்திரவதனனுக்கு தோன்றியது.
இதனால் சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென்று இரும்பால், சனியின் உருவத்தைப் வடிவமைத்து வழிபட்டான். ‘தன் தந்தைக்கு எந்தவிதமான துன்பமும் ஏற்படக் கூடாது என்றும், தன் தந்தைக்கு ஏற்பட இருக்கும் துன்பங்கள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கின்றேன் என்றும், அந்த சனி பகவானிடம் வேண்டிக் கொண்டான்’
சந்திரவதனன். இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சனி பகவான் ஏழரை நாழிகை மட்டும் சந்திரவதனனை பிடித்துக் கொண்டார்.
வேண்டுதலை நிறைவேற்றி அதன்பின்பு, சந்திரவதனனின் முன்தோன்றிய சனி பகவான் ‘உன்னை போன்ற நியாயமாக நடந்து கொள்பவர்களை நான் பிடிக்க மாட்டேன் என்றும், இப்போது உன்னை பிடித்ததற்கு காரணம் உன் முன் ஜென்ம வினை தான் என்றும் கூறி’ மறைந்தார்.
இதன்பிறகு சந்திரவதனன் சனிபகவானை வணங்குவதற்காக குச்சுப்புல்களை சேகரித்து, ஒரு கூரை அமைத்து, சனிபகவானுக்கு ஒரு கோவில் எழுப்பி வழிபட்டு வந்தார் என்று கூறுகிறது வரலாறு.
குச்சினால் அமைக்கப்பட்ட கோவில் உருவாக்கப்பட்டதால் இந்த ஊருக்கு குச்சனூர் என்ற பெயர் வந்தது.
அந்த நாளிலிருந்து சனியினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
பலன்கள்:
ஏழரை சனியின்
தாக்கத்தால் கஷ்டப்படுபவர்கள் இந்த கோவிலுக்குச் சென்று வந்தால் சனி பகவானின் தாக்கமானது குறைந்து நன்மை ஏற்படும்.
செல்லும் வழி:
சென்னையிலிருந்து தேனி அல்லது சின்னமனூர் நகருக்குச் செல்ல வேண்டும். குச்சனூருக்கு தேனி மற்றும் சின்னமனூர் ஆகிய ஊர்களிலிருந்து குறிப்பிட்ட நேரங்களில் நகரப் பேருந்து வசதி இருக்கிறது.
திருவிழாக்களின் போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தினால் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
தரிசன நேரம்:
காலை 06.30AM – 12.00PM மாலை 04.30PM – 08.00PM
முகவரி:
அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில், குச்சனூர்-625 515. தேனி மாவட்டம்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி.
ஓம் நமசிவாய
மோகனா செல்வராஜ்
நன்றி.