கோவிஷீல்டு தடுப்பூசி மத்திய அரசு அனுமதி: பிரதமர் மோடி முதலில் போட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தல்

 


கொரோனா தடுப்பூசியை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் 3-ம் கட்ட பரிசோதனையை முடியாத போது அவசரம் காட்டுவது ஏன் என நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

உலக நாடுகளை கலங்கடித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் - அஸ்ட்ராஜெனெகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு முதலில் ஒப்புதல் தந்த நிலையில் மத்திய அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளது. 

கோவிஷீல்டு என்ற இந்த தடுப்பூசியை புனே நகரில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் இந்தியாவில் தயாரிக்க உரிமம் பெற்றுள்ளது.

சென்னையில்  செய்தியாளர்களை சந்தித்த சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தடுப்பூசி விவகாரத்திலும் மத்திய அரசு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஆதரகவாகவே செயல்படுவதாக குற்றம் சாட்டினார். 

இந்த விஷயத்தில் மத்திய அரசு அவசரம் காட்ட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். இதனிடையே கோவிஷீல்டு தடுப்பூசிக்கே முன்னுரிமை வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோவாக்சின் தடுப்பூசி மாற்று மருந்தாகவே பயன்படுத்தப்படும் என அந்த அமைச்சகம் கூறியுள்ளது. 

இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் ஆகியோர் அவர்கள் நாட்டு மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த்த கொரோனா தடுப்பூசியை முதல் முதலாக போட்டுக்கொண்டது போல பிரதமர் மோடியும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.