தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடப்பு ஆண்டிலேயே துவங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் விருதுநகர், இராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர்,கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 மருத்துவக் கல்லூரிகளை துவங்குவதற்கு மத்திய அரசு அனுமதியளித்ததை யொட்டி தமிழக அரசு ரூ. 1200 கோடி நிதி ஒதுக்கி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக முதல்வர் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு விழாவில் கலந்து கொண்டு பேசும் போது, இந்த 11 மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 மருத்துவ இடங்கள் வீதம் மொத்தம் 1650 மருத்துவ இடங்கள் புதிதாக கிடைத்துள்ளது எனவும், இக்கல்லூரிகளில் நடப்பாண்டிலேயே (2020-2021) மாணவர் சேர்க்கை துவங்கும் என அறிவித்தார்.
தமிழக பெற்றோர்களும், மாணவர்களும் நடப்பாண்டில் தங்களுக்கு மருத்துவ இடம் கிடைக்கும் என பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த எதிர்பார்ப்போடுஅதிகமானவர்கள் நீட் தேர்வும் எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
ஏற்கனவே உள்ள மருத்துவ இடங்களுக்கு மட்டும் மருத்துவ கலந்தாய்வு இதுவரையில் நடந்துள்ளது. இதன் மூலம் புதிய மருத்துவக் கல்லூரிகளில் இனி மாணவர் சேர்க்கைக்கு வாய்ப்பில்லை என தெளிவாகிவிட்டது.
இக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை.
இதனால் 2021-2022, 2022-2023 ஆண்டுகளில் தான் மாணவர் சேர்க்கை துவங்கும் என தகவல்கள் வெளியாகி,மாணவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சி யளித்துள்ளது.அனுமதிக்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் 6-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் கட்டுமானப் பணிகள் 80 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளன. இதர கல்லூரிகளிலும் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. நடப்பாண்டில் இக்கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டால் அவர்களுக்கு வகுப்புகள்நடத்த போதுமான இட வசதி உள்ளன. மேலும், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை உள்ளதால் முதலாமாண்டுக்கு தேவையான பயிற்சிகளையும் அங்கேயே மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. இவ்வளவு இருந்த பின்னரும் மத்திய அரசு நடப்பாண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்காதது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
ராஜ்காட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை 31.12.2020 அன்று தான் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஆனால் இம்மருத்துவமனைக்கு 50 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான சேர்க்கை நடைபெற்றுள்ளது.
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையின் கிளை காரைக்காலில் துவக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக மாணவர் சேர்ககை நடைபெற்று வருகிறது. ஆனால்,அம்மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் முறைப்படி இப்போதுதான் துவங்க உள்ளன.
தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளில் 80 சதவிகிதம் கட்டுமானப் பணிகள் முடிந்தும் ஒரு இடம் கூட மத்திய பாஜக அரசு ஒதுக்கவில்லை.தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கத்தோடு மத்திய அரசு பாரபட்சமான முறையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுத்துள்ளது.
புதிய கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறாததால் தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் அதிக கட்டணம் செலுத்தி படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மத்திய அரசை வற்புறுத்திட அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுக!
இதர மாநிலங்களில் நடப்பாண்டிலேயே புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கும், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கும் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது போல, தமிழகத்திலும் புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடப்பாண்டிலேயே துவங்கிட, தமிழகத்தின் உரிமையை காப்பாற்றிட தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
மேலும், தமிழக மாணவர்களின் மருத்துவப்படிப்பு கனவை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசை வற்புறுத்தும் வகையில் தமிழக அரசு, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.