திருமண தடை உள்ளவர்கள் அனுமரின் வாலில் பொட்டு வைத்து நம்பிக்கையுடன் வேண்டிக்கொள்பவர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
மார்கழி மாதம் அமாவாசை நாளில் மூலம் நட்சத்திர நன்னாளில் அனுமன் அவதரித்தார். அவரது அவதாரம் பற்றி புராண கதை உள்ளது.
திரேதாயுகத்தில் வாழ்ந்த சிவபக்தனான குஞ்சரன் என்பவர் குழந்தை வரம் கேட்டு ஈஸ்வரனை நோக்கித் தவம்புரிந்தார். 'சர்வலட்சணமும் கொண்ட அழகிய மகள் உனக்குப் பிறப்பாள்.
அவளுக்குப் பிறக்கும் மகன் எனது அம்சமாகத் தோன்றி வலிமையும், வீரமும் கொண்டு சிரஞ்சீவியாக வாழ்வான்' என்று ஈசன் வரமளித்து மறைந்தார்.
ஈசனின் அருளால் குஞ்சரனுக்குப் பிறந்த மகள், அஞ்சனை அழகுடன் வளர்ந்தாள். மணப்பருவம் அடைந்த அஞ்சனை, கேசரி என்னும் வானர மன்னரை மணந்துகொண்டாள்.
திருமணம் முடிந்தும் அஞ்சனைக்குப் புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. இதனால் எந்நேரமும் ஈசனை எண்ணி கண்ணீர் வடித்தாள் அஞ்சனை. பக்தியும், நற்குணங்களும் கொண்ட அஞ்சனையின் நல்ல குணங்களை மெச்சி தர்மதேவதை அவளின் முன்தோன்றி, அஞ்சனையே நீ மாலவன் வீற்றிருக்கும் திருவேங்கடமலைக்கு உன் கணவருடன் சென்று தங்கி, ஈசனைக் குறித்து தவம்செய்.
ஈசன் அருளால் எவராலும் வெல்ல முடியாத அழகிய மகனைப் பெறுவாய் என்று ஆசி கூறினாள்.
தர்மதேவதை கூறியவாறே திருமலைக்குச் சென்று கடும் தவம் இருந்தாள் அஞ்சனை. பஞ்சபூதங்களும் வியக்கும் வண்ணம் அவள் இருந்த தவம் கண்டு வாயு தேவன் மகிழ்ந்தார்.
ஈசனின் ஆணைப்படி அஞ்சனையின் தவத்தை மெச்சி வாயுதேவன் ஓர் அற்புதக்கனியைப் பரிசளித்து ஆசிர்வதித்தார். அந்தக் கனியை உண்ட அஞ்சனை கருவுற்றாள்.
மார்கழி மாத மூல நட்சத்திர நன்னாளில் அனுமன் அவதரித்தார். சிவன் சக்தி அருளால் தோன்றிய அனுமன், வாயுபுத்திரன், அஞ்சனை மைந்தன், ஆஞ்சநேயன் என்று திரு நாமங்களுடன் திகழ்ந்தார்.
ஈசனின் அம்சமாகப் பிறந்த அனுமன், சகல கலைகளிலும் சிறந்து விளங்கினார். சிறுவயதில் இருந்தே ராம பக்தராக திகழ்ந்தார்.
ஸ்ரீராமரின் குலத்தையே காத்த கடமை வீரராக விளங்கினார். எண்ணிய காரியங்களை வெற்றியாக மாற்றும் ஆற்றல் மிக்க தீரனாக விளங்கினார். இதனால் சகல கடவுளர்களின் ஆசியோடும், வரத்தோடும் நித்ய சிரஞ்சீவி பட்டமும் பெற்றார்.
எவர் ஸ்ரீராமரையோ, ஆஞ்சநேயரையோ மனமுருகி வேண்டினாலும் அவர்களைக் காக்கும் பெரும் பொறுப்பை ஏற்றார்.
வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் விரதம் இருப்பது சிறப்பானது. எல்லா நாள்களை விடவும் அனுமன் ஜனித்த இந்த அனுமன் ஜயந்தியில் அவரை வேண்டி விரதம் இருப்பது சகல சௌபாக்கியங்களையும் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை.
சனிபகவானை வெற்றிகொண்ட வீர ஆஞ்சநேயரை அனுமன் ஜயந்தி நாளில் வணங்கினால் சனிதோஷங்களிலிருந்து பாதுகாப்பினைப் பெறலாம். சகல ஆனந்தங்களையும் அள்ளித்தருபவர் ஆஞ்சநேயர் என்று புராணங்கள் கூறுகின்றன.
சிவனையும் திருமாலையும் ஒன்றிணைக்கும் தெய்வமாக விளங்குபவர் ஆஞ்சநேயர், எனவே இவரை வணங்கி அளவில்லாத ஆனந்த நிலையினைப் பெறலாம்.
ராம அவதாரம் நிகழ்ந்த போது தேவர்களும் அதில் பங்கேற்க பூமியில் வானரங்களாகப் பிறந்தனர். சிவனும் ராமசேவை செய்ய வேண்டும் என்பதற்காக அனுமனாக அவதரித்தார்.
இதற்கென பார்வதியிடம் அனுமதி பெற்றார் சிவன். கணவரைப் பிரிந்திருக்க முடியாது என்பதால், அனுமனின் வாலாக பார்வதியும் உடன் வந்தாள்.
மேலும் அனுமனின் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாக ஐதீகம். திருமணத்தடை அகல அனுமனைப் பிரார்த்தித்து அவரது வாலில் பொட்டு வைத்து வழிபடுவது நன்மை தரும்.
வாலில் நுனியில் இருந்து, இந்த 'பொட்டு வைக்கும் பிரார்த்தனையை' தொடங்க வேண்டும். சந்தனப் பொட்டு வைத்து, அதன் மீது குங்குமம் வைக்க வேண்டும்.
இரண்டாவது நாள் அடுத்த பொட்டு வைக்க வேண்டும். இப்படித் தினமும் ஒரு பொட்டாக வைத்து, ஒரு மண்டலத்திற்குள் அதாவது 48 நாட்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்த வழிபாடு முடிவதற்குள் விருப்பம் நிறைவேறும். விரதம் இருந்து நினைத்த காரியம் நிறைவேறிய உடன் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று அவல், தேன், பானகம், கடலை, இளநீர் படைத்து வழிபடலாம்.
"ஸ்ரீ ஆஞ்சநேயர் திருவடிகளே சரணம்"
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி.
ஓம் நமசிவாய
மோகனா செல்வராஜ்