இரவோடு, இரவாக இடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது - தினகரன்

 இலங்கையின் பூர்வ குடிகளான தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடும் இத்தகைய நடவடிக்கைகள் சரியானதல்ல என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் இன மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் தூண் அமைக்கப்பட்டது.ஆனால் நேற்று முன்தினம்  இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் தூண் புல்டோசர் மூலம் அதிகாரிகள் இடித்தனர்.இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இரவோடு, இரவாக இடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது; கடும் கண்டனத்திற்குரியது.

இலங்கையின் பூர்வ குடிகளான தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடும் இத்தகைய நடவடிக்கைகள் சரியானதல்ல. தமிழ் மக்களின் எண்ணங்களில் நிறைந்திருக்கும் போராட்டத்தின் நினைவுகளை, சின்னங்களை அழிப்பதன் மூலம் அகற்றிவிட முடியாது.தமிழர்களின் உயர்வையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பற்றி சிந்திப்பதற்குப் பதிலாக இப்படி சர்வாதிகாரமாக நடந்து கொள்வது விரும்பத்தகாத விளைவுகளையே ஏற்படுத்தும். இதனை இலங்கை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.