சட்டமன்ற தேர்தல்: தொகுதிகள் – கே.எஸ்.அழகிரி

 


தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் தேவையான தொகுதிகளை திமுகவிடம் கேட்டு பெற வேண்டும் என்று கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தலைமையிலான மாநில தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, காங்கிரஸுக்கு எந்த தொகுதியில் அதிக செல்வாக்கு என்பதை அறிந்து தேவையான தொகுதிகளை திமுகவிடம் கேட்டு பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது, ராகுல் காந்தியின் தமிழகசுற்றுப்பயணத்தை சிறப்பாக நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, சமீபத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக எந்த தியாகத்துக்கும் காங்கிரஸ் தயாராக உள்ளது. 

திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலுவாக உள்ளது. மதச்சார்பின்மை என்ற கொள்கையில் உறுதியுடன் உள்ள கட்சிகள் ஒரே நேர்கோட்டில் இணைந்துள்ளன என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.