தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கருப்பந்துறை ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள கோழிப் பண்ணைக்குள் நீர் புகுந்ததால் 300 நாட்டுக்கோழிகள் உயிரிழப்பு.
கடந்த சில தினங்களாக நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லையில் உள்ள பிரதான அணைகள் நிரம்பி உபரி நீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரங்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த இடங்களில் இருந்து மக்களை வெளியேற்ற பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதனைப்போலவே குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம் புரண்டு ஓடுகிறது
அந்த வகையில் தாமிரபரணி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கருப்பந்துறை ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள கோழிப் பண்ணைக்குள் நீர் புகுந்துள்ளது. இதனால் அங்கிருந்த 300க்கும் மேற்பட்ட நாட்டு கோழிகள் மற்றும் கோழி குஞ்சுகள் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தனர். மீதமுள்ள கோழிகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி உள்ளனர்.