இன்று ஒரு ஆன்மிக தகவல்

அனுமனின் பிரசாதமாக செந்தூரம் வழங்கப்படுவதற்கான காரணம் பற்றிய பதிவுகள் :

அனுமனின் பிரசாதமாக வழங்கப்படும் செந்தூரத்தை தினமும் இட்டுக்கொண்டால், கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும்; பிரிந்த தம்பதி விரைவில் ஒன்று சேருவார்கள்; சந்தான பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள் என சிலாகிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஆஞ்சநேயர் வழிபாடு மிக மிக வலிமையானது. ஆஞ்சநேயருக்கு தனிக்கோயில்கள் ஏராளமாக இருக்கின்றன. அதேபோல், வைணவக் கோயில்களில் ஆஞ்சநேயருக்கு தனிச்சந்நிதிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

சிவபெருமானின் பிரசாதமாக விபூதி வழங்கப்படுகிறது. அம்மன் கோயில்களிலும் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோயிலிலும் விபூதியும் குங்குமமும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

பெருமாள் கோயில்களில் துளசியும் பிரம்மா குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் பிரம்மா பிரசாதமாக மஞ்சளும் வழங்கப்படுகிறது. அதேபோல் அனுமன் குடிகொண்டிருக்கும் ஆலயத்தில், அனுமனின் சந்நிதியில், துளசி பிரசாதம் வழங்குவது வழக்கம். முக்கியமாக, நாம் நெற்றியில் இட்டுக் கொள்வதற்கான பிரசாதமாக செந்தூரம் வழங்கப்படுகிறது.

எல்லா அனுமன் கோயில்களிலும் செந்தூரப் பிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்கு ஒரு காரணமும் புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ராமாயணத்தில் இதுகுறித்து சொல்லப்பட்டுள்ளது.

சீதாபிராட்டியைக் கடத்திச் சென்ற ராவணன், அவளை அசோகவனத்தில் வைத்திருந்தான். சீதையைத் தேடி ராமர் ஒருபக்கம் அலைந்து கொண்டிருந்தார். அனுமன் சீதையைத் தேடிப் புறப்பட்டார்.

இலங்கைக்கு வந்த அனுமன், அங்கே அசோகவனத்தில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் சீதாபிராட்டியைக் கண்டார். பார்த்த க்ஷணத்தில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். ‘நீங்கள் இல்லாமல் ஸ்ரீராமரின் முகமும் மனமும் வாடிப்போனார்’ என்று தெரிவித்தார். சீதையும் ராமரின் பிரிவால், இளைத்துப் போயிருந்தாள்.

அப்போது முன்னதாக, சீதாதேவியின் திருப்பாதத்தைக் கண்டு வணங்கினான். அவளின் பாத விரல்களில், மெட்டி அணிந்திருந்தாள் என விவரிக்கிறது வால்மீகி ராமாயணம்.

அந்தத் தருணத்தில் சீதையின் நெற்றியைக் கண்டான் அனுமன். சீதையின் நெற்றியில் குங்குமத்துக்கு பதிலாக செந்தூரம் இருந்தது. ‘அன்னையே... என்ன இது? உங்களின் நெற்றியில் குங்குமம் இட்டுக்கொள்ளவில்லையே... ஏன்? எதற்காக செந்தூரத்தை இட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார் ஆஞ்சநேயர்.

அதற்கு சீதாதேவி, ‘முன்பைக் காட்டிலும் ராமபிரானின் நினைவு என்னை இன்னும் வியாபித்திருக்கிறது. மனதில் முழுமையாக இருக்கிறார் ராமபிரான். ராமச்சந்திர மூர்த்தியை மனதில் நினைத்துக்கொண்டு நெற்றியில் எப்போதும் குங்குமம் இட்டுக்கொள்வேன். 

ஆனால் குங்குமம் கூட கரைந்துவிடக் கூடியது. ஆனால் செந்தூரம் அப்படியில்லை. அவ்வளவு சீக்கிரத்தில் கரைந்துவிடாது. 

மேலும் செந்தூரம் இட்டுக்கொண்டால் வெகு நேரத்திற்கு அப்படியே இருக்கும். ஒருவேளை செந்தூரத்தைத் துடைத்தாலும் செந்தூரம் இருந்த இடத்தில் செந்தூரம் வைத்ததன் கறை இருக்கும்.

‘என்னையும் என்னுடைய ராமச்சந்திர மூர்த்தியையும் எவராலும் பிரிக்க முடியாது. என்னுள் அவரின் நினைவுகளே இருக்கின்றன’ என்பதை வலியுறுத்தவே செந்தூரம் இட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்றார் சீதாதேவி.

இதைக் கேட்டதும் சிலிர்த்துப் போனார் ஆஞ்சநேயர். ‘என்னுடைய நினைவிலும் ராமபிரானே இருக்கிறார். 

அடியேனின் சகல செயல்களிலும் ராமச்சந்திர மூர்த்தியே இருக்கிறார்’ என்று சொல்லி, தன் உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக்கொண்டார் அனுமன் என விவரிக்கிறது ராமாயணம்.

இதனால்தான் அனுமனின் பிரசாதமாக செந்தூரம் வழங்கப்படுகிறது. அனுமன் கோயில்களில், அனுமனை வணங்கி பிரார்த்தித்து விட்டு வருகிற பக்தர்களுக்கு செந்தூரப் பிரசாதம் வழங்குவது வழக்கத்துக்கு வந்தது.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 

ஓம் நமசிவாய

மோகனா செல்வராஜ்