பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் - ஒரு கண்ணோட்டம் ...

 

பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் - ஒரு கண்ணோட்டம் ...

இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் அநேக சிவன் கோவில்கள் இருந்தாலும், 274 கோவில்கள் மட்டுமே பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் என்ற சிறப்பைப் பெற்றிருக்கின்றன. தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் வாழ்ந்திருந்த காலமாகிய 7, 8 மற்றும் 9-ம் நூற்றாண்டுகளில் இயற்றப்பட்ட தேவார பதிகங்களில் இந்தக் கோவில்களைப் பற்றியும், கோவில்களில் குடி கொண்டுள்ள சிவபெருமானைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் என்று கூறப்படும் இந்தக் கோவில்கள் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. அவ்வளவு பழம் பெருமை வாய்ந்த இந்தக் கோவில்கள் தனிச்சிறப்பு பெற்றதில் வியப்பில்லை.

தமிழ்நாட்டில் தேவாரம் எழுந்ததற்கு முன்பே சிவாலயங்கள் இருந்து வந்தன. அடியார்கள் அந்தந்த ஊர்களில் ஆலய வழிபாடு செய்து வந்தார்கள். 

இராஜ ராஜ சோழனும், நம்பியாண்டார் நம்பிகளும் தில்லை சிதம்பரத்தில் தேவாரம் எழுதியிருந்த ஏட்டுச் சுவடிகளைக் கண்டுபிடித்து எடுத்த போது அவைகள் கறையானால் மூடப்பட்டிருந்தது. 

பிறகு எண்ணை ஊற்றி கறையானைப் போக்கி ஏட்டை எடுத்துப் பார்க்கும் போது பல பதிகங்கள் சிதைந்திருந்தன. அதைக் கண்டு சோழ மன்னன் வருந்தியபோது "ஈண்டு வேண்டுவன வைத்தோம்" என்று அசரீரி வாக்கு எழ, பிறகு கிடைத்தவற்றை ஒழுங்கு படுத்தினார்கள். 

தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் தோன்றி தேவாரம் பாடிய பிறகு, தேவாரம் பெற்ற ஸ்தலங்களுக்கு தனி மதிப்பு ஏற்பட்டது. 

அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய இந்த மூவரும் அக்காலத்தில் இருந்த இந்தக் கோவில்களுக்குச் சென்று அங்கு குடி கொண்டுள்ள இறைவனைத் தரிசித்து இறைவன் மேல் பதிகங்கள் பாடியுள்ளனர். 

பல இடங்களில் பதிகங்கள் பாடி அற்புதங்களும் நிகழ்த்தியுள்ளனர். உதாரணமாக திருமருகல் என்கின்ற சிவஸ்தலத்தில் பாம்பு கடித்து இறந்த ஒரு வணிகனின் உயிரை மீட்டுத் தரும்படி அவன் மனைவி கதறி அழுது கேட்டுக்கொண்டதின் பேரில் அவள் பால் இரக்கப்பட்டு " சடையாய் எனுமால் " எனத் தொடங்கும் பதிகம் பாடி திருஞான சம்பந்தர் இறைவனிடம் உயிர்ப் பிச்சை கேட்டார். இறந்த வணிகனும் திருமருகல் இறைவன் மாணிக்கவண்ணர் பேரருளால் உயிர் பெற்று எழுந்தான். 

அதே போன்று திங்களூர் சிவஸ்தலத்தில் பாம்பு கடித்து இறந்து விட்ட அப்பூதியடிகள் மூத்த மகனை "ஒன்று கொலாம் " என்று ஆரம்பிக்கும் பதிகம் பாடி இறந்தவனை உயிர்ப்பித்து எழுப்பிய அற்புதம் திருநாவுக்கரசரால் நிகழ்ந்தது. ஒவ்வொரு சிவஸ்தலமும் ஒவ்வொரு பெருமை பெற்றது.

தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் மூவரும் அவர்கள் காலத்தில் உள்ள போக்குவரத்து சிரமங்களையும் பாராமல் இந்த கோவில்களுக்குச் சென்று அங்குள்ள சிவபெருமானைப் பாடி புகழ்ந்துள்ளனர். ஒரு சில சிவஸ்தலங்களுக்கு இவர்கள் நேரில் போகாமல் இருந்த போது, இறைவனே இவர்கள் கனவிலோ அல்லது அசரீரியாகவோ கூப்பிட்டு அவர்களை வரச்செய்து இறைவன் தன் மேல் பதிகங்கள் பாட வைத்திருக்கிறார்.

இவர்கள் பாடிய பதிகங்கள் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் பல ஆண்டுகளாக சிதம்பரம் கோவிலில் உள்ள ஓர் அறையில் பூட்டி வைக்கபட்டு இருந்தன. திருமுறை கண்ட சோழன் என்றழைக்கப்படும் ராஜராஜ சோழன் காலத்தில் இவை கண்டுபிடிக்கப்பட்டு திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி என்பவரால் தொகுத்து ஒழுங்கு படுத்தப்பட்டன. 

சைவத் திருமுறைகள் 12 ஆக வகுக்கப்பட்டுள்ளன. 

இவற்றில் முதல் 7-ம் தேவார மூவர் பாடிய பதிகங்களைப் பற்றிய விபரங்களைக் கொண்டுள்ளன. 

முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடிய பதிகங்களைக் கொண்டுள்ளன.

 4,5, 6-ம் திருமுறைகளில் திருநாவுக்கரசர் பாடிய பதிகங்களும், 7-ம் திருமுறையில் சுந்தரர் பாடிய பதிகங்களும் இடம் பெற்றுள்ளன. 

தமிழ் இலக்கியங்களில் தேவாரப் பாடல்கள் என்று குறிப்பிடப்படும் இந்த பதிகங்கள் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளன.

திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் தேவாரங்களைப் பாடத் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. இவர் தனது சொந்த ஊரான சீர்காழியிலுள்ள தோணியப்பர் மீது, "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் அவரது முதற் பதிகத்தைப் பாடினார். 

திருவதிகை வீரட்டானம் என்னும் தலத்தில் பாடிய "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்று தொடங்கும் பதிகமே அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரின் முதற் பதிகமாகும். 

திருவெண்ணைநல்லூர் என்னும் தலத்தில் பாடிய "பித்தா பிறைசூடி" என்று தொடங்கும் தேவாரம் சுந்தரரின் முதற் பதிகமாகும்.

திருநாவுக்கரசர் (அப்பர்) சிவஸ்தலங்கள் எண்ணிக்கை

சிவன் கோவில்களுக்கு நேரில் சென்று பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் 125

நேரில் செல்லாமல் மற்ற சிவன் கோவில்களில் குடிகொண்டுள்ள சிவபெருமானைப் பற்றி பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் 98

பதிகம் பெறாத சிவஸ்தலங்கள் 51

திருஞானசம்பந்தர் சிவஸ்தலங்கள் எண்ணிக்கை

சிவன் கோவில்களுக்கு நேரில் சென்று பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் 219

நேரில் செல்லாமல் மற்ற சிவன் கோவில்களில் குடிகொண்டுள்ள சிவபெருமானைப் பற்றி பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் 12

பதிகம் பெறாத சிவஸ்தலங்கள் 43

சுந்தரர்  சிவஸ்தலங்கள் எண்ணிக்கை

சிவன் கோவில்களுக்கு நேரில் சென்று பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் 84

நேரில் செல்லாமல் மற்ற சிவன் கோவில்களில் குடிகொண்டுள்ள சிவபெருமானைப் பற்றி பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் 54

பதிகம் பெறாத சிவஸ்தலங்கள் 136

மாணிக்கவாசகர்

சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும்.

இவர் பாடிய பாடல்கள் "திருவாசகம்" என அழைக்கப்படுகின்றன. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது. 

திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடல்களையும் இணைத்து மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாக கொண்டுள்ளார்கள். 

கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் இருக்கும் பாவை நோன்பின் ஒரு பகுதியாக இந்த பாடல்களைப் பாடுவது உள்ளது.

சிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வரவேற்று வணங்கி 'தாங்கள் யாரோ?' என்று வாதவூரார் கேட்டார்.

'நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை ஓத வந்தேன்' என்று அந்தணர் கூறினார்.

'நான் சொல்கிறேன், நீர் அவற்றை எழுதும்' என்று கூறினார் திருவாதவூரார்.

அதற்கு ஒப்புக்கொண்ட அந்தணர் பலப்பல செய்யுட்களை எழுதி முடித்தார். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார்.

முடித்ததும், ஓலைச்சுவடியின் முடிவில் 'மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்' என்று கையொப்பமிட்டு, திருமுறையைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். 

அதைப் பார்த்த ஒருவர் அவ்வேடுகளை எடுத்துப் பார்க்க, அது திருவாசகமும், திருக்கோவையும் கொண்ட சுவடியாய் இருந்தது. மிகவும் மனம் மகிழ்ந்த அவர் தில்லை மூவாயிரவரைக் கூட்டிப் பூசைகள் செய்தார். 

மூவாயிரவர் நடந்த நிகழ்ச்சிகளின் பொருள் என்ன என்று வாதவூராரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்துக்கு அழைத்துச் சென்ற வாதவூரார் பொருள் இதுவே என்று கூறித் தில்லையம்பலத்தைக் காட்டி மறைந்தார்.

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரான ஜி. யு. போப் மாணிக்கவாசரைப் பற்றி, "உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலைத்த பக்தி ஆகிய பண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை" என்று குறிப்பிடுகின்றார். தமிழ் கற்ற மாணவனான ஜி.யூ.போப் இதற்கு தக்க சான்றாகும்.

 "சிறை பெறா நீர் போல் சின்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறையுறை சிவனே" என்பதாலும், 

"இமைப் பொழுதும் என் னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க." எனும் அடிகளால் தமிழின் அருட் திறத்தையும், வாதவூரரிற்கும் இறைவனுக்குமான நெருக்கத்தையும் உணரலாம்.

"நரியைக் குதிரைசெய்" எனும் திருநாவுக்கரசர் பாடல் மூலம் இவர் காலத்தால் அப்பருக்கு முந்தியவர் என கருதப்படுகிறது.

இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்

நன்றி. 

பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்