ஜனவரி 30ம் தேதி நாடு முழுக்க உண்ணாவிரதம், பொதுக்கூட்டங்கள்.. விவசாய சங்கங்கள் அறிவிப்பு

 

மத்திய பட்ஜெட் தினத்தன்று நாடாளுமன்றத்தை நோக்கி மேற்கொள்ளவிருந்த பேரணியை ஒத்தி வைப்பதாக சில விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. அதற்கு பதில் ஜனவரி 30ம் தேதி மகாத்மா காந்தி நினைவு தினத்தில் நாடு முழுக்க உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெறும்.

விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவரான தர்ஷன் பால், வேளாண் சட்டங்களுக்கு எதிராக மகாத்மா காந்தியின் நினைவு தினமான வருகிற 30-ஆம் தேதி அன்று நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தன்று நிகழ்ந்த வன்முறையில் பின்னணியில் சதி இருப்பதாக குற்றம் சுமத்திய அவர், அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். 

பிரச்சினைக்கு காரணமான நடிகர் தீப் சிங் சித்து பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் கைக்கூலி என்றும் அவர் கூறினார். 

வன்முறையைத் தொடர்ந்து செங்கோட்டை வருகிற 31-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என தொல்பொருள் ஆய்வுத்துறை தெரிவித்துள்து. 

அதற்கான காரணம் என்னவென்று இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை தெரிவிக்கவில்லை. 

இதனிடையே, டெல்லியின் எல்லையில் நடந்த போராட்டங்களில் இருந்து பாரதிய கிசான் யூனியன் (பானு) மற்றும் அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு விலகியுள்ளன. விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்து வரும் ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ், "செங்கோட்டை சம்பவத்திற்கு நாங்கள் வருந்துகிறோம், அதன் தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.