திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் மறுப்பு

 


சமூக, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார, விளையாட்டு, மதம் மற்றும் கல்வி சார்ந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளை முழுமையாக அனுமதிக்கும் உத்தரவை ரத்து செய்து, தனி மனித விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தொடர உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் பிரபு பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, இதேபோல மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் ஜனவரி 11 வரை 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற தற்போதைய நிலை நீடிக்க உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார். கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாலும், மாநிலத்தின் நிலை மேம்பட்டுள்ளதாலும், கட்டுப்பாடுகளை தொடர அவசியமில்லை என்பதாலேயே 100 சதவீத இருக்கையை அனுமதித்ததாகவும் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, கொரோனா கட்டுக்குள் வந்தாலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், தடுப்பு மருந்து வரும் வரை பொறுமையாகவும், குழந்தைகளை போலவும் மெல்ல அடியெடுத்து வைக்க வேண்டுமெனவும் அரசுக்கு அறிவுத்தினர். கல்வி நிலையங்கள் திறக்க அனுமதிக்காத நிலையில் திரையரங்குகளில் மட்டும் 100 சதவீத அனுமதி என்பது நல்லதல்ல என தெரிவித்தனர்.

திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு தற்போது அனுமதி வழங்க முடியாது என சென்னை உயநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது. 

மறு உத்தரவு வரும் வரை 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

100% இருக்கைக்கு டாக்டர்கள், மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. உயர்நீதிமன்ற மதுரை கிளையும் மறுபரிசீலனை செய்ய அரசுக்கு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்கக்கோரி பிலிம் பெடரேஷன் அமைப்பு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பெடரேஷன் தலைவரும், தயாரிப்பாளருமான கலைப்புலி எஸ்.தாணு கடிதம் எழுதியுள்ளார். 

கல்வி நிலையங்கள் திறக்கப்படாத நிலையில் திரையரங்குகளில் 100 சதவீதம் அனுமதிப்பது நல்லதல்ல என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.