சென்னை ஐஐடியில் குபீரென கொரோனா பரவ காரணம் என்ன? பரபரப்பு பின்னணி

 


ஐஐடி சென்னை வளாகத்தில் கொரோனா வைரஸ் எவ்வாறு வேகமாக பரவியது என்பதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சென்னை ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் நேற்று ஒரே நாளில் 32 மாணவர்களுக்கும், இன்று ஒரே நாளில் 33 மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், ஐஐடி மெட்ராஸ் இப்படியாக ஒரு நிலைமையை சந்தித்துள்ளது, பிற கல்லூரிகளுக்கு ஒரு பாடம் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஓப்பனாக தெரிவித்துள்ளார்.


சென்னை ஐஐடி மாதிரியே.. பிற கல்லூரிகளிலும் கொரோனா பரவ வாய்ப்பு- ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

இதுவரை சென்னை ஐஐடியில் மாணவர்கள், பணியாளர்கள் உட்பட 104 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு எங்கிருந்து பாதிப்பு துவங்கியது என்பது பற்றி உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் எளிதாக மற்றவர்களுக்கு பரவியது எப்படி என்பது பற்றி தகவல் வெளியாகி உள்ளது.

இது பற்றி ஆய்வு மாணவர் ஒருவர் நிருபர்களிடம் கூறுகையில், லாக்டவுன் காரணமாக குறைந்த அளவு மாணவர்கள் இருக்கும் போது இங்கு ஒரு மெஸ் இயங்கிவந்தது போதுமானதாக இருந்தது. தற்போது மாணவர்கள் அதிக அளவு வந்த பிறகும் இங்கு ஒரு மெஸ் மட்டுமே இருப்பதால் அதில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருந்தது.

உணவு சாப்பிடும் இடத்தில் யாரும் முகக்கவசம் பயன்படுத்துவது முடியாது என்பதால் கூட்டம் மற்றும் முக கவசம் இல்லாமை ஆகிய இரண்டு பிரச்சினைகளும் சேர்ந்து எளிதாக அதிகம் பேருக்கு கொரோனா பாதிப்பு பரவி உள்ளது என்று தெரிவித்தார்.

ஒரே ஒரு மெஸ் இருப்பதுதான் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் என்ற தகவலை தொடர்ந்து அந்த மெஸ் தற்போது மூடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தனித்தனியாக அவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு உணவு, அனுப்பி வைக்கப்படுவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை ஐஐடி மாணவர்களுக்கு மட்டும் கிடையாது. பிற கல்லூரி நிர்வாகங்களுக்குமே இது ஒரு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது. மாணவர்கள் எங்கு அதிகம் கூடுவார்களே அங்கு கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. பெரும்பாலான கல்லூரிகளில் ஒரே ஒரு ரெஸ்டாரன்ட் மட்டுமே இருக்கும் என்பதால் ஐஐடி மெட்ராஸ் நிலைமை மற்ற கல்லூரிகளுக்கும் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

எனவே, மாணவர்கள் கல்லூரி உணவகங்களை பயன்படுத்தாமல் வீட்டிலிருந்து உணவு எடுத்துச் செல்வது அல்லது தனித்தனியாக விடுதிகளுக்கே, ஆர்டர் செய்து சாப்பிடுவது தற்காலிகமாக இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க வழியாக அமையும் என்பது சுகாதாரத்துறை நிபுணர்கள் கருத்து.