சொர்க்கவாசல் திறப்பு : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை

 


ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் ஒவ்வொரு திருவிழாவையும் காண பக்தர்கள் மாநிலம் முழுவதிலும் இருந்து வருவார்கள். கொரோனா காலம் எல்லாவற்றையும் மாற்றி விட்டது. 

கோவில் திருவிழாக்களில் குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஆன்லைனில் புக் செய்தவர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடைக்கிறது. வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு தயாராகி வருகிறது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.

பூலோக வைகுண்டம் என்று பெருமாள் பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா கோலம்தான். மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு வரும் 14ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. 25ஆம் தேதி பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று திருச்சி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

வைகுண்ட ஏகாதசி விழாவை 21 நாட்களும் கோயில் இணையதளத்திலும் Srirangam temple என்ற யுட்யூப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் பக்தர்கள் தடையின்றி கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பொதுமக்கள் யாரும் டிசம்பர் 24ஆம் தேதி மாலை 6 மணி முதல் 25ஆம் தேதி காலை 8 மணி வரை ஸ்ரீரங்கத்திற்கு வரவேண்டாம் என கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.