ஸ்ரீரங்கம் ரங்கநாதர் வைகுண்ட ஏகாதசி
108 வைணவத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புரிக்குரியதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முக்கிய திருவிழாவான வைகுண்ட ஏகாதசி விழா மார்கழி மாதத்தில் நடைபெறும்.
முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு எனும் பரமபதவாசல் திறப்பு நாளை (25ம் தேதி) அதிகாலை 4.45 மணிக்கு நடக்கிறது.
கொரோனா காரணமாக கோயிலில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சொர்க்கவாசல் திறப்பை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
சொர்க்கவாசலை கடந்து மண்டபத்திற்கு வந்த பின்பு காலை 8 மணிக்கே முன்பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இதனால் இந்த முறை நம்பெருமாள் பக்தர்கள் கூட்டமின்றி சொர்க்கவாசலை கடக்க உள்ளார்.
4 மணிக்கு நடை மூடல்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சொர்க்கவாசல் திறப்புக்கு முந்தைய நாள் மாலையிலேயே பக்தர்கள் கோயிலில் குவிவார்கள். இவர்கள் பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து வந்து தரிசனம் செய்வார்கள்.
இதனால் கூட்டம் அதிகளவில் இருக்கும். தற்போது கொரோனா காரணமாக இந்தாண்டு இந்த தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று (24ம் தேதி) மாலை 4 மணியுடன் கோயில் நடை சாத்தப்படும்.
ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்கள் மட்டும் நாளை (25ம் தேதி) காலை 8 மணி முதல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
சென்னை -வைகுண்ட ஏகாதசி
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை சென்னையில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு, அனைத்து கோயில்களிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் நாளை சொர்க்க வாசல் திறப்பு நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து சென்னை பார்த்த சாரதி திருக்கோயில், மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயில், கேசவ பெருமாள் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் நாளை காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
மேலும், கொரோனா நோய் தொற்று காரணமாக பெரும்பாலான கோயில்களில் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இருதயநோய் போன்ற இணை நோய் கொண்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கோயில் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.