முருகப்பெருமானின் சரவணபவ மந்திரத்தின் பொருள்

 

முருகப்பெருமானின் சரவணபவ மந்திரத்தின் பொருள்


சிவனாரிடமிருந்து முருகன் தோன்றியதால் ‘சிவமும் முருகனும்’ ஒன்றே என்பது தத்துவம். சைவ சித்தாந்தம் முருக வழிபாட்டை சைவத்தின் ஒரு கூறாவே கருதப்படுகிறது.

முருகப்பெருமான் இச்சா சக்தியான வள்ளியையும், கிரியா சக்தியான தெய்வானையையும் மணந்த ஞான சக்தியாக தென்னாட்டிலும், பிரம்மச்சாரியான கார்த்திகேயராக வடநாட்டிலும் வழிபடப்படுகிறார்.
 
சரவணப்பொய்கையில் உதித்த சண்முகக் கடவுளை கார்த்திகைப் பெண்கள் வளர்த்தமையால், கார்த்திகை நட்சத்திரம், ஆடி மாதத்தில் வரும்  கிருத்திகை நட்சத்திரம், ஆடிக் கிருத்திகை என்றே சிறப்பித்துக் கொண்டாடப்படுகிறது. அன்று துவங்கி, கிருத்திகை நட்சத்திரம் தோறும்  விரதமிருந்து, தைக்கிருத்திகை அன்று விரதம் முடிப்பவர்களுக்கு எம்பெருமான் முருகனருளால் தீராப் பெருந்துயர் தீரும்.
 
திருமுருகனின் ஷடாட்சர மந்திரம் ‘சரவணபவ’ என்பதாகும். ‘சரவணபவன்’ என்றால் நானல் சூழ்ந்த பொய்கையில் உதித்தவன் என்று  பொருள். ‘சரவணபவ’ மந்திரத்தின் தத்துவம் பின்வருமாறு விளக்கப்படுகிறது.

ச - செல்வம்
ர - கல்வி
வ - முக்தி
ண - பகை வெல்லல்
ப - காலம் கடந்த நிலை
வ - ஆரோக்கியம்


 
 
சூரபத்மன் போன்ற அசுரர்களுக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்த இடும்பன், பின் முருகனின் கருணையைப் பெறவேண்டி, அகத்தியர் ஆணைப்படி, சிவகிரி, சக்திகிரி ஆகிய இருமலைகளை பிரம்மதண்டத்தின் இருபுறமும், பாம்புகளை உறியாகக் கட்டி, கழுத்தில்  தண்டாயுதபாணியாக முருகன் ஆட்கொள்ளவே, தன்னை போல், காவடி சுமந்து வருபவர்களின் கோரிக்கைகளை முருகன் நிறைவேற்றித் தர  வேண்டும் என வரம் பெற்றான்.

முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன்.

சூரபத்மாதியர், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன் ஆகியோர் பரம சிவபக்தர்களே, அவர்கள் சாகாவரம் வேண்டினர். அந்த வரம் கிடைக்காமல் போகவே சிவனின்மறு அவதாரத்தால் அழிவை வேண்டினர். அது கிடைத்தது. சிவன் தங்களை அழிக்க மாட்டான் என நம்பி, அகங்காரம் மேலிட, அவர்கள் தேவர்கள் அனைவரையும் பணியாளர்களாக்கினர்.

பிரம்மா, விஷ்ணு முதல், யாவரும் மோன நிலையிலிருந்த சிவபெருமானை வேண்டினர், அவரும் இசைந்து பார்வதியை பங்குனி உத்திரத்தன்று மணம் புரிந்தார். சூரபத்மாதியரின் அட்டூழியத்தை அடக்க, சிவமறு அவதாரம் வேண்ட, சிவன் தமது ஐந்து முகங்களுடன் அதோ முக்தினின்றும் ஜோதியை எழுப்பி, வாயுவையும் அக்னியையும் அதை ஏந்தி கங்கையில் இடச் செய்தார். கங்கை, சரவணப் பொய்கையில் 6 தாமரைகளில் இட்டாள். அங்கு 6 ஜோதியும் 6 குழந்தைகளாக மாறின. அவர்கள் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டனர். அதனால் முருகன், காங்கேயன், சரவணபவன், கார்த்திகேயன், என்றும் துதிக்கப்படுகிறான்.

உமை, குழந்தைகளை அழைத்து அணைக்க ஆறு குழந்தைகள், ஆறுமுகம், பன்னிருகை, இருகால், ஓருடலாகக் கந்தனாக (ஸ்கந்தன் = ஒன்று சேர்ந்தவன்) மாறினான். கந்தன் உதித்ததினம் வைகாசி மாத – விசாக பௌர்ணமி. அதனால் அவன் பெயர் விசாகன். 

சிவஜோதியின் மறு உருவம். வேதசொரூபன் அதனால் சுப்ரமண்யன், என்றும் இளையவன் அதனால் குமாரன், மிக அழகானவன் ஆகவே முருகன் (முருக என்றால் அழகு).

"முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பது பொருளாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவற்றைக் குறிக்கும்.

முருகப் பெருமானின் யந்திரம் ஷட்கோண வடிவானது.

தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினைச் சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். பண்டைய காலத்தில் கௌமாரம் எனும் தனித்த மதமாக இருந்த முருகன் வழிபாடு பின்பு இந்த சமயத்துடன் இணைந்தது.

நூல்கள்

கந்தபுராணம் என்னும் பாடற்தொகுதி கச்சியப்ப சிவாச்சாரியாரால் இயற்றப்பட்டது.

இது முருகப்பெருமானின் வரலாற்றை எடுத்து உரைக்கிறது. சங்ககால இலக்கியமான திருமுருகாற்றுப்படை, முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அவனது ஆறுபடை வீடுகளையும் பாடும் காவியம் ஆகும்.

மேலும் சண்முக கவசம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா, குமரவேல் பதிற்றுப்பத்தந்தாதி, சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி போன்ற நூல்களும் முருகனின் பெருமை சொல்வன.


இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும்  நமது  உண்மை  செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

ஓம்  சிவாய நம  ஓம் சரவணபவ

பக்தியுடன் மோகனா செல்வராஜ்