கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சபரிமலைக்கு வர வேண்டும் எனவும், மீறி வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு அவர்கள் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த பல மாதங்கள் அடைக்கப்பட்டு இருந்த வழிபாட்டு தலங்கள் அனைத்தும் தற்பொழுது கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வழிபாட்டு தலங்களிலும் குறிப்பிட்ட அளவு மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சபரிமலையில் கூட்ட நெரிசலை தடுப்பதற்காக ஆன்லைன் மூலமாக ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுவார்கள் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த சில நாட்களாக ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்களும் சாமி தரிசனத்திற்கு வந்த வண்ணம் இருப்பதால் கூட்ட நெரிசல் காரணமாக அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து தேவஸ்தான தலைவர் வாசு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டுப்பாடுகள் காரணமாக ஆன்லைனில் முன்பதிவு செய்து வரக்கூடிய பக்தர்களுக்கு மட்டுமே சபரிமலை தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு வருவதாகவும், முன்பதிவு செய்யாத பக்தர்கள் சபரிமலை தரிசனத்திற்கு முயற்சிப்பதாக தகவல் வந்துள்ள நிலையில், இனி அவ்வாறு முன்பதிவு இன்றி பக்தர்கள் வரவேண்டாம் எனவும், மீறி வந்தாலும் அனுமதி கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.