4 சிறார்கள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு

 
சென்னை பெருநகர எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், காணாமல் போன குழந்தைகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கும் வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையருக்கு காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். 

குழந்தைகள், சிறுமிகள் காணாமல் போனால் அருகில் உள்ள காவல் நிலையங்களில் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என துணை ஆணையர் ஜெயலட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அதன்படி, துணை ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் விசாரணையில் இறங்கினர்.


இதையடுத்து, திருவொற்றியூரில் காணாமல்போன குழந்தை வியாசர்பாடியில் கண்டுபிடிக்கப்பட்டு அவரது பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. 


இதேபோல் பூக்கடை போலீஸாரால் தேடப்பட்டு வந்தசிறுமி பெரும்பாக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.


மேலும் ராஜமங்களத்தில் காணாமல்போன குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல் கொடுங்கையூர் பகுதியில் காணாமல் போன 17 வயது சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கவனம் தேவை


இதுகுறித்து துணை ஆணையர் ஜெயலட்சுமி கூறும்போது, ''குழந்தைகள் மற்றும் சிறுமிகளை அவர்களின் பெற்றோர்கள் மிகவும் கவனமுடன் கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் யாரேனும் காணாமல் போனாலோ, மாயமானாலோ, கடத்தப்பட்டாலோ உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்'' என்றார்.


காணாமல் போன குழந்தைகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.