கார்த்திகை மாதம் சிறப்பு

தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான கார்த்திகை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது.



தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான  கார்த்திகை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. அக்னி ரூபமாய் போற்றப்படும் சிவனுக்கும், அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் உகந்த மாதமாக கார்த்திகை மாதம் பக்தர்களால் போற்றப்படுகிறது.


கார்த்திகை திருநாள் கார்த்திகை மாதம் கிருத்திகா நட்சத்திரத்தில் கார்த்திகை கொண்டாடப்படுகிறது. 


தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம்.


கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம். தமிழர்கள் தம் இல்லங்களில் 27 தீபம் ஏற்றுவது தான் சிறப்பு இவை 27 நட்சத்திரங்களை குறிக்கும்


பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள் மீன் பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை-நாள் முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது.

கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா.


கார்த்திகை மாதத்தில் துலாராசியில் இருந்த சூரியன் நீச்சம் மாறி உச்சம் ஆகிறார் என்கின்றன புராணங்கள்.

 

சூரியனின் நகர்வைக் கொண்டே தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. சித்திரை மாதத்தில் சூரியன் தன் உச்சவீடான மேஷத்தில் பிரவேசம் செய்வது தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.

 

இதன் பின்னர் சூரியன் ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகளைக் கடந்து தன் நீச்ச வீடான துலாத்திற்கு வந்து விடுவார். நீச்ச வீடு வரும் போது சூரியன் தன் பலத்தை இழந்து விடுவார்.

 

பின்னர் மீண்டும் தன் உச்ச ராசியான மேஷத்திற்குச் செல்ல, விருச்சிக ராசியில் இருந்து தன் ஏறுமுகமான பயணத்தைத் தொடங்குவார்.

 

அவ்வாறு பயணம் செய்யும் போது ஒளிக் கடவுளான சூரியனுக்கு மரியாதை செய்யும் விதமாக கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று தீபங்கள் ஏற்றி வழிபடுகிறோம்.

மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும்.

பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு பனையோலைகளால் அதனை சுற்றி அடைத்து "சொக்கப்பனை"க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர்.


கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளியும் கொண்டாடுவர்.


அக்னி ரூபமான அண்ணாமலையார் சிவபெருமானை கார்த்திகை மாதம் முழுதும் வழிபடுகிறோம். சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம்.

 

கார்த்திகை மாதத்தின் திங்கள் கிழமைகளில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகின்றது.

 

இந்தநாளில் அனைத்து சிவ ஆலயங்களிலும் சங்காபிஷேகம் நடைபெறுவது சிறப்பம்சமாகும். சிவ பெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய ஆறு பொறிகளே சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக உருவானதாக கூறுகிறது ஸ்கந்த புராணம்.

 

முருகப்பெருமானாக மாற அந்த அறுவரையும் வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள் இதற்காக அவர்கள் அறுவரும் நட்சத்திரமாக விளங்குகின்றனர். அந்த கார்த்திகை நட்சத்திரத்தின் அதி தேவதை 'அக்னி". கிருத்திகா ப்ரதமம் என்று வேதத்தில் கார்த்திகை நட்சத்திரம் முதலாவதாக கூறப்படுள்ளது.

கார்த்திகை நட்சத்திரத்தன்று பூரணை கூடுகின்ற மாதம் கார்த்திகை ஆகும்.இதனால் இக்கார்த்திகை நாள் திருக்கார்த்திகை எனப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும் அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலுள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் (Pleiades) எனப்படுகிறது. 

 

கார்த்திகை மாதத்தில் மது, மாமிசம் முதலானவைகளை ஒழித்து விரதம் அனுசரிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு பதத்தை அடைவார்கள்.

 

கார்த்திகை மாதத்தில் மாமிச ஆகாரத்தைக் கைவிடாதவர்கள் புழுப் பூச்சிகளாய் பிறவி எடுப்பார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.

 

இந்த மாதத்தில்தான் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதமிருந்து மலைக்கு செல்கின்றனர்.

மாதங்களில் கார்த்திகை மாதம் மன உறுதி தரும் என்பது ஐதீகம். விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல்சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது.

 

எனவே, கார்த்திகை மாதத்தைத் "திருமண மாதம்" என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது. கார்த்திகை மாதப் பௌர்ணமி நாளில் சந்திரன் ரிஷபராசியில் முழுமையாக இருப்பதால் ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள நீர் தெய்வீக ஆற்றல் பெறுகிறது.

 

அப்போது செய்யும் ஸ்நானம் எல்லாத் தீமைகளையும் பாவங்களையும் அழித்துவிடும் என்று கருதப்படுவதால் இந்து மதச் சடங்குகளில்
கார்த்திகை ஸ்நானம் ஒரு முக்கிய இடம் பெறுகிறது.

 

தினமும் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் எல்லா துன்பங்களும் விலகும். கார்த்திகை மாதம் தீபம் தானம் செய்வது லட்சுமிகடாட்சம் தரும். வெண்கலப்பாத்திரம், தானியம், பழம் போன்றவற்றை தானம் செய்தால் செல்வம் சேரும்.



இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் பயணம் தொடரும்.


தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்  திருச்சிற்றம்பலம்.


ஓம் சரவண பவ


நன்றி. 


மோகனா  செல்வராஜ் 




 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Popular posts