திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம்- பக்தர்களுக்கு அனுமதியில்லை

 திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம் கடற்கரையில் நடைபெறும் என உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு கந்த சஷ்டி விழா நவ. 15-ல் தொடங்கி நவ 21 வரை 12 நாட்கள் நடைபெறுகிறது.


ஐகோர்ட் மதுரை கிளையில் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தை கடற்கரையிலும், திருக்கல்யாணத்தை மண்டபத்திலும் நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.


இந்தாண்டு கரோனா நோய்த் தொற்று காரணமாக சூரசம்ஹாரமும், திருக்கால்யாணமும் கோயில் உள்ளே உள்ள மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாக்கள் பாரம்பரிய முறைப்படி நடைபெற வேண்டும்.


அதன்படி சூரசம்ஹாரம் கடற்கரையிலும், திருக்கல்யாணம் திருக்கல்யாண மண்டபத்திலும் பாரம்பரிய வழக்கப்படி நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.


இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப் பாண்டியன் ஆஜராகி, ‘‘பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று வழக்கம்போல இன்று மாலை சூரசம்ஹாரம் கடற்கரையிலேயே நடத்தப்படும்.


கோயிலின் உள்பகுதியிலுள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு திருக் கல்யாணமும் நடைபெறும்’’ என்றார்.


இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அனைவரும் பார்க்கும் வகையில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யலாம் எனக் கூறி மனுவை முடித்து வைத்தனர்.