வெள்ள நீரில் மிதக்கும் சென்னை புறநகர் பகுதிகள்


சென்னை புறநகரில் தொடர் மழை பெய்து வருவதால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சென்னையை சுற்றியுள்ள 14 ஏரிகள் நிரம்பிவிட்டதால் அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.


ஏற்கெனவே அவ்வப்போது பெய்த மழையால் சென்னையை சுற்றியுள்ள ஏரிகள் ஓரளவு நிரம்பின. ஆனால் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.


அதிலும் புறநகர் பகுதிகளில் தாம்பரம், முடிச்சூர், காட்டாங்கொளத்தூர், குன்றத்தூர், மாங்காடு, ஆவடி, அம்பத்தூர் என பல ஊர்களில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. அது போல் அதிகாலையும் மழை தொடர்கிறது.

இந்த நிலையில் சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் செந்தமிழ் நகரில் கனமழையால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கின.


காவனூர் ஏரி நிரம்பியதால் தாழ்வான இடங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது.

மேலும் கீழ் தளத்தில் இருப்பவர்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தெரிந்தவர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.


சென்னை புறநகரில் உள்ள இரையூர், செம்பாக்கம், நத்தப்பேட்டை, வையூர், கொளப்பாக்கம், அரனேரி, வையூர், புல்லிட்டின்தாங்கல் உள்ளிட்ட 14 ஏரிகள் நிரம்பி வழிகிறது.

மக்கள் எந்த நேரத்தில் வெள்ளநீர் வீட்டுக்குள் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில் தூக்கத்தை தொலைத்து விட்டுள்ளனர். குழந்தைகளை வைத்துக் கொண்டுள்ள நிலையில் மழை நீரில் அடித்து வரப்படும் விஷ ஜந்துக்களுக்கு அச்சப்பட்டு வரும் சூழல் சென்னையில் நிலவுகிறது.