விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்

 மின்னணு வர்த்தக தளத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களில், விலை விபரம் உள்ளிட்ட கட்டாயத் தகவல்களுடன், எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பது குறித்த தகவலையும் தெரிவிக்க வேண்டும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இந்நிலையில், இது குறித்து, 'அமேசான் மற்றும் பிளிப்கார்ட்' ஆகிய நிறுவனங்களுக்கு, கடந்த மாதம் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம், 'நோட்டீஸ்' அனுப்பி இருந்தது.


விற்பனை செய்யப்படும் பொருட்களில், அவை எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பது குறித்த தகவலை தெரிவிக்கவில்லை என கூறி, அமேசான் நிறுவனத்துக்கு அபராதம் விதித்துள்ளது, அரசு.

இதன் தொடர்ச்சியாக தற்போது, பெங்களூரைச் சேர்ந்த, அமேசான் விற்பனையாளர் சேவைகள் நிறுவனத்திற்கும், அதன் ஒவ்வொரு இயக்குனர்களுக்கும், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட்டை பொறுத்தவரை, அதன் மீதான குற்றச் சாட்டுகள் குறித்து விசாரித்த போது, அத்தகைய விதிமுறை மீறல்கள் எதுவும் காணப்படவில்லை என்பதால், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில விற்பனையாளர்கள், தங்களுடைய வர்த்தக தளத்தில் இத்தகைய தகவல்களை தெரிவிக்க வில்லை என கூறி, குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டது அமேசான்.


இதையடுத்து, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய விதிமீறல்கள் குறித்து அனுப்பப்படும் நோட்டீசுக்கு, திருப்தியளிக்கும் விதத்தில் பதிலளிக்கப்படாவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என, மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.