தொழில்நுட்பத்தின் மூலம் மனித கவுரவத்தை மேம்படுத்தியுள்ளோம்: பிரதமர் மோடிபேச்சு

 தொழில்நுட்பத்தின் மூலம் மனித கவுரவத்தை மேம்படுத்தியுள்ளோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


23-வது பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மாநாட்டில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா பங்கேற்றார்.  இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:- 


டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளுக்கான சந்தையை மத்திய அரசு வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இது தொழில் நுட்பத்தை அனைத்து திட்டங்களின் முக்கிய பகுதியாக ஆக்கியுள்ளது. தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் என்பதே எங்கள் நிர்வாக மாதிரியாகும். தொழில்நுட்பத்தின் மூலம் மனித கவுரவத்தை மேம்படுத்தியுள்ளோம். 


தொழில்நுட்பத்தினால் ஒரே கிளிக்கில் மில்லியன் கணக்கான விவசாயிகள் பண ஆதரவைப் பெற்றனர். கொரோனா ஊரடங்கின் உச்சத்தில் இந்தியாவின் ஏழைகளுக்கு முறையான மற்றும் விரைவான உதவி கிடைப்பதை தொழில்நுட்பம் உறுதி செய்தது. தகவல் சகாப்தத்தில் முன்னேற இந்தியா தனித்துவமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.   


எங்களிடம் சிறந்த சிந்தனை மற்றும் மிகப்பெரிய சந்தை உள்ளது. நமது தொழில்நுட்ப தீர்வுகள் உலகளவில் செல்லக் கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளன. இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உலகத்திற்காக பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்ப தீர்வுகளுக்கான நேரமிது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.