திருப்பதி பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்

 



ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக சாமி தரிசனம் செய்வது தொடர்பாக தேவஸ்தான நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



நாடு முழுவதும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


அதன் ஒருபகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டது. கோயில்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்கள் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக மூடப்பட்டு பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ஒருகட்டத்தில் தளர்வுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கின.


அதில் கடந்த ஜூன் மாதம் முதல் வழிபாட்டு தலங்கள் திறக்க உத்தரவிடப்பட்டது. ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் உள்ளூர் பக்தர்கள் மட்டும் முதலில் அனுமதிக்கப்பட்டனர்.



பின்னர் பிற பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் ரூ.300 கட்டணத்துடன் வழிபட ஏற்பாடு செய்யப்பட்டது. இலவச தரிசனத்திற்கு கூட்டம் அலைமோதியதால், கொரோனாவை கருத்தில் கொண்டு ரத்து செய்யப்பட்டது. பின்னர் வைரஸ் தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்ததை அடுத்து, ஏழுமலையான் தரிசனத்திற்கு இலவச டோக்கன்கள் வழங்கப்பட்டன.


இதற்காக திருப்பதி அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் நாள்தோறும் 3,000 இலவச தரிசன டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன.


அதாவது காலை 5 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை டோக்கன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக முதல்நாள் இரவு முதலே பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கத் தொடங்கினர். இதனால் பலருக்கும் இலவச டோக்கன்கள் கிடைக்காத சூழல் ஏற்பட்டது.


பின்னர் நாளொன்றுக்கு 6,000 இலவச தரிசன டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதேசமயம் குழந்தைகள், முதியவர்களை அழைத்து வர வேண்டாம் என்று கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


வரும் நாட்களில் இலவச டோக்கன்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. திருமலைக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் வனவிலங்குகளின் நடமாட்டம் குறைந்துள்ளது.


இந்த வழித்தடத்தில் வனத்துறை, பாதுகாப்பு ஊழியர்கள் நடைபயணமாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து எட்டு மாதங்களுக்கு பிறகு ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் ஏழுமலையான் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் நடைபயணமாக திருமலைக்கு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.