சனீஸ்வரர் வழிபாடு


நவகிரகங்களில், சனிபகவானும் ஒருவர். இவர் சனைச்சரன் என்றும், மந்தன் என்றும் குறிப்பிடப்படுகிறார். 'சனை" என்றால் மெதுவாக என்று அர்த்தம்.


சூரிய பகவானின் மைந்தன் சனி பகவான். அம்மா சாயாதேவி. சாயாதேவியை, நிஷூபா, ப்ருத்வி என்ற பெயர்களிலும் அழைக்கிறது புராணம்.


நவகிரங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களில் மூன்று கிரகங்கள் தீய பலன்கள் அளிப்பதில் வலிமை வாய்ந்தவை.


அவை ராகு, கேது, சனி என்பனவாம். இவைகளில் முதன்மையானது சனி என்ற சனீஸ்வர பகவான்தான்.


சனீஸ்வர பகவானின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பர். இறைவனாகிய சிவ பெருமானையே ஒரு கணம் பிடித்ததால்தான் சனி ஈஸ்வரபட்டம் கிடைத்து சனீஸ்வரன் ஆனார்.


பன்னிரென்டு ராசிகளில் உள்ள ராசிக்காரர்களுக்கு சுமார் ஏழு ராசிகளின் அமைப்பு உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் ஏழரை சனி, கண்ட சனி, அஷ்டமசனி போன்ற பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும்.


இதனால் அவர்களுக்கு வாழ்வில் எடுத்த காரியங்களில் தோல்வி, பண முடக்கம், வம்பு, சண்டை, விரக்தி, தொழில் முன்னேற்றமின்மை எதிர்காலமே சூன்யமானது போன்ற இன்னல்களுக்கு ஆட்பட்ட வாழ்க்கையை மிகவும் சிரமமாக அனுபவித்து கொண்டிருப்பார்கள். 


ஒரு ராசியில் தனது பயணத்தைச் சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்கிறார் சனிபகவான். மற்ற கிரகங்களைவிட இவருடைய பயணம் மெதுவாக இருப்பதால், இவருக்கு இப்பெயர் உருவானது.


யாருக்கு பயப்படுகிறோமோ, இல்லையோ, சனிபகவானுக்கு பயப்பட்டே ஆக வேண்டும்.


ஏனென்றால் இவரிடமிருந்து யாரும் தப்பமுடியாது. யாராக இருந்தாலும் சரி, சனியின் தீர்ப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.


வறுமை, கலகம், நோய், அவமரியாதை என அனைத்திற்கும் மூல காரணமாக இருப்பது சனிபகவானே. அதே சமயம் ஜாதகத்தில் ஒருவருக்கு சனிபகவான் பலமாக இருந்தால் அவர்கள் தியாக மனப்பான்மை உடையவர்களாக இருப்பர்.


உலக அறிவு, பன்மொழி புலமை, எல்லாம் அவர்களுக்கு சாத்தியமாக இருக்கும். சனி இருக்கும் இடத்தை பொறுத்தே சுப பலன்களோ அல்லது அசுப பலன்களோ உண்டாகும்.


ஒருவருக்கு ஜாதக ரீதியான நன்மையான அல்லது தீமையான பலன்கள் தருவதில் முக்கிய பங்கு வகிப்பவர் சனிபகவான் தான்.


சனீஸ்வரர், தராசு முனை போல் தீர்ப்பு சொல்லக்கூடியவர். தீர்ப்பை சொல்வது மட்டுமின்றி, அதற்கான தண்டனைகளையும் சரியாக வழங்கக்கூடியவர். இவர் அரசனை ஆண்டியாகவும், ஆண்டியை அரசனாகவும் மாற்றுபவர்.


மனிதனுக்கு துன்பம் என்றால் என்ன? என்று புரியவைப்பார். இவரிடம் எந்த மந்திரியின் சிபாரிசும் எடுபடாது. இவர் அனைத்து மனிதனையும் தண்டிப்பவர்.


அதேசமயம், சனி கிரக தோஷம் உள்ளவர்கள் சனிபகவானை உரிய முறையில் தரிசித்துப் பிரார்த்தனை செய்து வணங்கி வந்தால், சனிபகவானின் அருளைப் பெறலாம். கிரக தோஷ பாதிப்பில் இருந்தும் விடுபடலாம்.


மனிதன் பிறப்பு எடுப்பதே கர்மத்தை தொலைப்பதற்குத்தான். அதனால் இவரின் பிடியில் இருந்து யாரும் தப்பமுடியாது.


பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே.


சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார்.


ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது.


பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.


ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும்.


அதே நேரத்தில் சனியால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு.


ஆகையால்தான் ”சனியைபோல் கொடுப்பவனும் இல்லை கெடுப்பவனும் இல்லை” என்றும், “சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்” என்ற ஜோதிட சொற்றொடர்களும் ஏற்பட்டன.


இந்த உலகமே இவரின் பிடியில் தான் உள்ளது. இவர் தண்டிக்கும் தெய்வம் அல்ல. நம்மை திருத்தும் தெய்வம். இவர் நம் கர்ம வினைகளுக்கு ஏற்ப சோதனை கொடுத்து நம்மை திருத்தி, நல்வழிப்படுத்தி நமக்கு நன்மை மட்டுமே செய்வார். 


 சனிபகவானை வணங்கினால், சனி தோஷம் மட்டுமின்றி மற்ற கிரக தோஷங்களில் இருந்தும் விடுபடலாம். நமக்கு ஏற்படுகிற அனைத்து சங்கடங்களையும், கஷ்டங்களையும், இன்னல்களையும் போக்கி அருளுவார் சனீஸ்வரர்.


சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனிபகவானுக்கு பிடித்தமான ஒன்றாகும்.


சனீஸ்வரன் தனக்குக் கிரகபதவியை வேண்டிக் காசிக்குச் சென்று விசுவநாதரை வழிபட்டு அப்பதவியைப் பெற்றமையால் சிவன் கோயில்களில் சனிபகவான் வழிபாடு செய்வது சாலச் சிறந்தது. சனி பகவானுக்குரிய தானியம் கறுப்பு எள். அதனால் எள்ளைப் பொட்டலமாகக் கட்டி மண் சிட்டிகையில் நவக்கிரகத்திற்கு முன்னால் வைத்து எரிந்து நீறாகும் வரை நல்லெண்ணை விட்டு எரிக்க வேண்டும்.


எள்ளுச் சாதம் நிவேதனம் செய்து காகத்திற்கு வைத்துவிட்டு உண்ண வேண்டும். சனி பகவானுக்கு நீல நிறமுள்ள சங்க புஸ்பமும், வன்னி, வில்வபத்திரங்களும் விருப்பமானவைகள்.


சனிதோஷம் உள்ளவர்கள் செப்புப் பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு தனது முகத்தை அதில் பார்த்துவிட்டு தானம் செய்வது சிறப்பு. 


எனவே இந்த வழிபாடு மேற்கொள்பவர்கள் சனியின் பார்வையிலிருந்து தப்பலாம். சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் சனீஸ்வரனின் அருள் பெற்று நீண்ட நாட்கள் வாழும் ஆயுளை பெறுவர்.


மேலும் செல்வம் பெருகி நாம் மகிழ்ச்சியான வாழ்வைப் பெறலாம். தொழில், வியாபாரங்களில் நிலையான வருமானத்தையும், தொழில் விருத்தியும் உண்டாகும்.


சனியின் பார்வை நேரிடையாக நம் மீது பட்டுவிடக் கூடாது என்பார்கள். ஆயிரம்தான் கோயில்கோயிலாகச் சென்று சனி பகவானைத் தரிசித்து வழிபட்டாலும் உண்மையாகவும் மற்றவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாமலும் வாழ்ந்தால், எந்த தோஷத்தில் இருந்தும் தப்பிக்கலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!


மை போன்று கருமை நிறம் கொண்டவனே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன்.


சனிக்கிழமை நாளில், சனீஸ்வரருக்கு எள் தீபமேற்றி வழிபடுங்கள். எல்லா நலமும் வளமும் தந்து, வாழ்வில் மேன்மையைத் தருவார் சனீஸ்வரர்.


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


சனீஸ்வரரின் பேரருளைப் பெற்று, இனிதே வாழ்வோம்


ஓம் நமசிவாய 


பக்தியுடன் மோகனா  செல்வராஜ்