தமிழகத்தில் டிஜிபிக்கள் உட்பட ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்

 தமிழகத்தில் 2 டிஜிபிக்கள் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் டிஜிபி அந்தஸ்த்தில் உள்ள இரண்டு அதிகாரிகளையும், டெல்லி அயல்பணியில் சிபிஐயிலிருந்து வந்த ஒரு அதிகாரியையும் தமிழக அரசு புதிய பதவிக்கு நியமித்து உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் இன்று வெளியிட்ட இடமாற்ற உத்தரவு வருமாறு:


1.உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபியாக பதவி வகிக்கும் ஜாஃபர் சேட் மாற்றப்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


2. தீயணைப்புத்துறை மற்றும் ரயில்வே துறை டிஜிபியாக பதவி வகிக்கும் சைலேந்திரபாபு தீயணைப்புத்துறை பொறுப்பு மாற்றப்பட்டு ரயில்வேத்துறை டிஜிபியாக நீடிக்கிறார். அவர் கூடுதல் பொறுப்பாக உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவையும் நிர்வகிப்பார்.


3. அயல்பணியில் பணியாற்றி தமிழகம் திரும்பி காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி துரைகுமார் சென்னை நிர்வாகப்பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் தீயணைப்புத்துறை டிஜிபி ஜாஃபர் சேட் டிசம்பர் மாதம் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.