கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலத்துக்கு பெயர் சூட்டிய முதல்வர்

கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலத்துக்கு பெயர் சூட்டிய முதல்வர் பழனிசாமி10-ஆம் தேதி குமரி மாவட்டத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மணக்குடி மேம்பாலத்துக்கு தமிழக முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பெயரை சூட்டினார். இது மீனவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், இந்தப் பாலத்தை எங்களுக்குத் தந்ததே கலைஞர்தான் என்று அதையும் நினைவு கூர்ந்தனர் மீனவர்கள்.


இதுகுறித்து மணக்குடி மீனவர்கள் கூறும் போது, கீழ மணக்குடி - மேல மணக்குடியை இணைக்கும் இந்தப் பாலத்தால் இரு மீனவ கிராம மக்களும் பயன் பெற்று வருகின்றனர்.


இந்தப் பாலம் மட்டும் இல்லையென்றால், 21 கி.மீ தூரம் சுற்றி வர வேண்டும். ஏற்கனவே காயல் மீது போடப்பட்டிருந்த சிறிய பாலத்தால் எந்தப் பயனும் இல்லாமல், மக்களும் நடந்து செல்ல முடியாத நிலையில்தான் இருந்தது. இதனால், அந்தப் பாலத்தை மாற்றி பயனுள்ளதாக இருக்க, பெரிய பாலத்தைக் கட்டித்தர அரசிடம் வேண்டுகோள் விடுத்தோம்.


இந்த நிலையில்தான் 1996-2000த்தில் கலைஞர் ஆட்சியில் பாலத்துக்கு தி.மு.க சுரேஷ்ராஜன் தலைமையில், அப்போதைய நெடுஞ்சாலைத்துறை மந்திரி, கிருஷ்ணன் அடிக்கல் நாட்டப்பட்டது.


அதன்பின்னர், பாலத்தின் பணிகள் நடந்து வந்தன. அடுத்து வந்த ஜெயலலிதா அந்தப் பாலத்தை திறந்து வைத்தார். பின்னர், அந்தப் பாலம் சுனாமியால் 4 துண்டுகளாக அடித்துச் செல்லப்பட்டது.


இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா தற்காலிகமாக ஒரு இரும்புப் பாலத்தை அங்கு அமைத்தார். அது கடல் நீராலும் கடல் காற்றாலும் துரு பிடித்து இருந்தன.


இந்த நிலையில்தான் மீண்டும் கலைஞர் ஆட்சி அமைந்ததும் 2008-ல் ரு.21 கோடி மதிப்பில் புதிய பாலத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நடந்து வந்தது.


பின்னர் அந்தப் பாலத்தை 2012-ல் ஜெயலலிதா சென்னையில் இருந்தே திறந்து வைத்தார். தொடா்ந்து அது மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டதால், தற்போது அந்தப் பாலம் வழியாகத்தான் கனரக வாகனங்களும் செல்கிறது.


இப்போது இந்தப் பாலத்துக்கு 2020-ல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பெயரைச் சூட்டியுள்ளார் என்றனர்.