8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு


கொரோனா பிரச்னையால் பாதிக்கப்பட்ட, எட்டு துறைகளின், 2 கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு, ஆறு மாத வட்டி தள்ளுபடி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பிரச்னைகளால், ரிசர்வ் வங்கி, இந்தாண்டு, மார்ச் - அக்., வரை, பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு, கடன் தவணை சலுகை வழங்கியது. இந்த ஆறு மாதங்களுக்கு வட்டியை தள்ளுபடி செய்யவும், வட்டிக்கு வட்டி வசூலிக்கக் கூடாது எனவும் உத்தரவிடக் கோரி, கஜேந்திர சிங் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இத்துடன், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் சார்பிலும், நிவாரணம் கோரி, மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


இந்த மனுக்களை, உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், '2 கோடி ரூபாய் வரையிலான கடன்களின், ஆறு மாத தவணை காலத்திற்கு, வட்டிக்கு வட்டி வசூலிக்கப்பட மாட்டாது; அதை, மத்திய அரசே செலுத்தும்' என, மத்திய அரசு தெரிவித்தது.


மேலும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கும், பல்வேறு ஊக்கச் சலுகை திட்டங்களை அமல்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. நேற்று, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.


அப்போது, அமர்வு பிறப்பித்த உத்தரவு:கொரோனாவால், மக்களின் ஆரோக்கியம் மட்டுமின்றி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது.


தற்போது, ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், வளர்ச்சி மந்தமாகவே உள்ளது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், கல்வி, வீட்டு வசதி, நுகர்வோர் சாதனங்கள், கிரெடிட் கார்டு, வாகனம், தனிபநர் மற்றும் நுகர்வு ஆகிய எட்டு துறைகளுக்கு, மத்திய அரசு உறுதி அளித்தபடி, தேசிய பேரிடர் நிவாரண சட்டத்தின் கீழ், நிவாரணம் வழங்கப்படவேண்டும்.


இத்துறைகளின், 2 கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு, ஆறு மாத வட்டி தள்ளுபடி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என, நீதிமன்றம் நம்புகிறது.


இத்துடன், இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு, அமர்வு உத்தரவு பிறப்பித்தது.