தீபாவளி பண்டிகை கூட்டத்தால் கொரோனா வைரஸ் காற்றில் கலந்தாலும் முகக்கவசம் அணிந்தால் தப்பிக்கலாம் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்தாலும் தீபாவளி பண்டிகை வருவதால், கூட்ட நெரிசலில் காற்றின் மூலம் வேகமாக கொரோனா பரவும் என்ற அச்சம் நிலவுகிறது.
வட மாநிலங்களில் தசரா பண்டிகைக்கு பிறகு டெல்லி, கர்நாடகா மாநிலங்களில் அதிகளவு கொரோனா பரவி விட்டது. கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பிறகு கொரோனா மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது.
அதே நிலைமை தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு கொரோனாவின் தாக்கம் அதிகமாகிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதற்காக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ‘ கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. 7 லட்சம் பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். ஒரு சிலர்தான் இதில் இறந்து விடுகின்றனர்.
கடுமையான களப்பணியால் தான் இந்தளவு முன்னேற்றத்திற்கு வந்துள்ளோம். கொரோனா இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
இதற்காக பொதுமக்களிடம் முகக்கவசம் அணியுங்கள் என்று தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். கொரோனா காற்றில் பரவுகிறது என்று சிலர் சொல்கிறார்கள்.
சிலர் ஒருவர் மூலம் மற்றொருவருக்கு பரவுகிறது என்கிறார்கள். ஒவ்வொரு ஆராய்ச்சியாளர்களும் ஒவ்வொரு விதமாக கூறுகிறார்கள். ஆனால், எந்த வழிமுறை மூலம் இதனை தெரிவிக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக சொல்வது இல்லை.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு இருமல் வந்தால், 2 மீட்டர் தூரம் வரை நீர்த்துளிகள் பரவும் என்பது உண்மை. அதில் உள்ள நுண் வைரஸ் கிருமிகள் எதிரே இருப்பவர்களுக்கு உடனே பரவும் என்பதும் உண்மை.
இதில் இருந்து நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால், முகக் கவசம் அணிந்திருந்தால் தான் முடியும். எனவே அந்த வகையில்தான் எங்கே சென்றாலும் முகக்கவசம் அணியுங்கள் என்று கூறி வருகிறோம்.
தற்போது தீபாவளி பண்டிகை என்பதால், கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் தனிக்கவனம் செலுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.