குரு பெயர்ச்சி 2020 சுருக்கமான பலன்கள் ( மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம்)

விகாரி வருடம் 2019ல் பெயர்ச்சியான குரு பகவான் போது தனுசு ராசியில் சஞ்சரித்து வருகிறார்.



தற்போது சார்வரி வருட குரு பெயர்ச்சியின் போது குரு பகவான் தனுசு ராசியில் உள்ள உத்திராடம் 1ம் பாதத்திலிருந்து மகரத்தில் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 2ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.


வாக்கிய பஞ்சாங்கத்தின்படி குரு ஐப்பசி 30 (நவம்பர் 15) ஞாயிறு அன்றும், திருக்கணித பஞ்சாங்க முறைப்படி கார்த்திகை 5 (நவம்பர் 20) வெள்ளிக்கிழமை அன்று பெயர்ச்சி ஆக உள்ளார்.


இதில் குருவின் சிறப்பு பார்வையான 2, 5, 7, 9, 11 ஆகிய பார்வை அருளால் ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலனை அளிப்பார்.மேஷம், மிதுனம்,சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்தால் தான் சுமாரான பலனைப் பெற முடியும்.


மேஷம் ராசி


மேஷ ராசிக்கு 10ம் இடமான தொழில், கர்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் தொழில், உத்தியோகத்தில் சற்று கவனமாக செயல்பட வேண்டிய ஆண்டாக இருக்கும். ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலைக்கு மாறும் போதும் எச்சரிக்கையாக இருக்கவும்.


குடும்பம் குதூகலமாக இருக்கும். உற்சாகமாக குடும்பத்தினருடன் நேரத்தை செலவு செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். புது வீடு, இடம், வாகனம் வாங்குவீர்கள். நோய்கள், கடன்கள் தீரும் காலமாகும். எதிரிகள் தொல்லை நீங்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.

தொழில் சார்ந்த பயணம், ஒப்பந்தங்களில் ஆலோசனையும், எச்சரிக்கையும் அவசியம். அதிசாரமாக வரக்கூடிய குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது உங்கள் தொழில், உத்தியோகத்தில் சிறப்பான மேன்மைப் பலன்களை அள்ளித்தருவார். மேலும் தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் வரும் போது உங்களுக்கு ஆறுதலான பலன்களை அளிப்பார். 

வழிபாடு :


குரு ஸ்தலமாகவும், ராசி நாதனுக்குரிய முருகப்பெருமான் குடி கொண்டிருக்கும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில் தரிசனம் செய்து வருவது நல்ல பலனைத் தரும்.


உங்கள் ராசியைப் பொருத்த வரை முருகப் பெருமானை வணங்கி வர எல்லா வகையிலும் சிறப்பான பலனைப் பெறலாம்.


​ரிஷபம் ராசி


குருவின் 5ம் பார்வை உங்கள் ராசி மீது விழுவது மிக சிறந்த அதிர்ஷ்ட பலனைத் தரும். பாக்கிய குருவாக ரிஷப ராசிக்கு 9ம் இடத்தில் அமர்கிறார்.


மகரத்தில் குரு சஞ்சரிக்கக்கூடிய காலம் மிக பொன்னானதாக இருக்கும். ஆடை, தங்க நகை ஆபரணங்கள் வாங்கக்கூடிய அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும்.


குரு பலன் வந்து விட்டது திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நிகழும். ராசிக்கு 3ஆம் இடம், 5 ஆம் இடங்களின் மீது குருவின் பார்வை படுவதால் முயற்சிகள் வெற்றியடையும், புத்திர பாக்கியம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களினால் வருமானம் உண்டு. பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். குழந்தைகளுக்கு சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

குடும்பம், தொழில் என சகல விதத்திலும் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். அரசு மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும்.

வழிபாடு :


சுக்கிரனை ராசி நாதனாக கொண்ட ரிஷப ராசியினர் மகாலட்சுமியை வணங்கி வருவது அவசியம். வெள்ளிக்கிழமை, சுக்கிர ஹோரையில் வழிபாடு செய்வது மேலும் விசேஷம்.


மிதுனம் ராசி


அஷ்டமத்தில் குரு அமைவது பெரிய நல்ல பலனைத் தராது. இருப்பினும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் புதிய சிந்தனை, திறமைகளை பயன்படுத்தி விடா முயற்சி செய்தால் கண்டிப்பாக நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.


அடுத்து அஷ்டம சனி வரக்கூடிய காலம் என்றாலும் அங்கு குரு இருக்கும் சூழலால் சனியின் பாதிப்பை குறைப்பார். தொழில், உத்தியோகத்தில் எந்த ஒரு குறை இல்லாமல் முன்னேற்றம் இருக்கும்.


குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குடும்பம் குதூகலமாக அமையும், கணவன் மனைவி இடையே உற்சாகம் அதிகரிக்கும். பேசும் வார்த்தையில் இனிமை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். சுப விரையங்கள் அதிகம் நடைபெறும். வெளிநாடு செல்லும் யோகம் வரும். மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்லலாம்.

2021ல் உங்களுக்கு நம்பிக்கை தரும் ஆண்டாக இருக்கும். குரு அதிசாரத்திற்கு வரும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

வழிபாடு :


வியாழக்கிழமைகளில் குருவையும், சனிக்கிழமைகளில் சனிபகவான் என நவகிரக வழிபாடு செய்து வரவும்.


சிவ வழிபாடு உங்கள் சிரமங்களையும், சிக்கல்களையும் தீர்க்கும்.


கடகம் ராசி


கடக ராசிக்கு 7ம் இடமான களத்திர ஸ்தானம் எனும் துணை, மனைவி, தொழில் கூட்டாளி ஸ்தானத்தில் குரு அமர்கிறார். குருவின் சிறப்பு பார்வை ராசி மீது விழுகிறது. இதனால் இதுவரை நீங்கள் அனுபவித்த துன்பங்கள், துயரங்கள், இக்கட்டான சூழல் நீங்கும்.


இருப்பினும் குடும்ப உறவில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தம்பதியிடையே மனக்கசப்புகள் அதிகம் தோன்ற வாய்ப்புள்ளது. நீங்கள் அன்பைக் கொடுத்து அனுசரித்துச் சென்றால் இனிக்கும். குரு அதிசார காலங்களில் பிரச்னைகள் தீரும். மற்றபடி பல வகையில் அதிர்ஷ்டத்தை கடக ராசியினர் பெறுவார்கள்.


குருபலன் வந்து விட்டது திருமணம் கைகூடி வரும். காதல் வெற்றியடையும். 9ஆம் பார்வையால் உங்களின் முயற்சி ஸ்தானமான 3 ஆமிடத்தை பார்வையிடுவதால் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். 5ஆம் பார்வையால் உங்க லாப ஸ்தானத்தை பார்வையிடுவதால் செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். மூத்த சகோதரரின் அன்பு அதிகரிக்கும். பாக்கெட் நிறைய பணம் வரும்.

வழிபாடு :

முன்னோர் வழிபாடு செய்வதும், வியாழக்கிழமைகளில் குரு, சித்தர்கள், மகான்களின் ஜீவசமாதி வழிபாடு செய்வதும். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது சிறந்தது.


முருகனை வழிபாடு செய்வதால் குடும்ப பிரச்னைகள் தீரும்.