டிக் டாக் தடை..நீட்டிப்பு


 

சீன நிறுவனமான பைட்டான்ஸின் டிக் டாக் செயலியை தடை செய்ய அமெரிக்காவில் நீண்டகால இழுபறி நிலவி வருகிறது. டிக் டாக் செயலியை தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் கடந்த செப்டம்பர் மாதம் கையெழுத்திட்டார்.


இந்த தடை உத்தரவு நவம்பர் 12-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.


இதனால், நவம்பர் 12-ம் தேதி முதல் டிக் டாக் தடை செய்வதற்கு டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து, டிக் டாக் பயனாளர்கள் 3 பேர் பென்சில்வேனியா மாகாணம் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.


பின்னர், நீதிபதிகள் டிக் டாக் தடை செய்வதற்கு இடைக்கால தடை விதித்தனர்.


டிக்டாக் தனது அமெரிக்க சொத்துக்களை விற்பனை செய்வதற்கான காலக்கெடு காலாவதியாக உள்ள நிலையில்  கடந்த செவ்வாய் கிழமை  டிரம்ப் நிர்வாகக் குழுவின் நடவடிக்கைகளை மறுஆய்வு செய்யக் கோரி டிக் டாக் மனு தாக்கல் செய்தது.


இந்நிலையில், டிக் டாக் பயன்பாட்டைத் தடை செய்ய அமெரிக்க அரசாங்க உத்தரவிலிருந்து 15 நாள் (அதாவது நவம்பர் 27 வரை) நீட்டிப்பை பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 800 மில்லியன் பயனாளர்கள் டிக்டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதில் 100 மில்லியன் பயனாளர்கள் அமெரிக்காவில் பயன்படுத்தி வருகின்றன.


இவர்களில் 50 மில்லியன் நபர்கள் தினமும் டிக் டாக் செயலி பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.