கோவிந்தராஜ பெருமாள் சயன கோல தத்துவம் (திருச்சித்திரக்கூடம் - போக சயனம்)

மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களையும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களையும் அவசியம் தரிசிக்கவேண்டும்.



அனைத்து தலங்களையும் தரிசிக்க முடியாவிட்டாலும் தங்களால் எத்தனை முடியுமோ அத்தனை தலங்களை தரிசிக்கவேண்டும்.


ஸ்ரீரங்கம் - வீர சயனம்
மகாபலிபுரம் - தல சயனம்
திருமயம் - போக சயனம்
திருக்கோஷ்டியூர் - பால சயனம்
கும்பகோணம் - உத்தான சயனம்
திருவனந்தபுரம் - அனந்த சயனம்
திருமோகூர் - பிரார்த்தனா சயனம்
திருப்புல்லாணி - தர்ப்ப சயனம்
திருச்சித்திரக்கூடம் - போக சயனம்
திருநீர்மலை - மாணிக்க சயனம்
ஸ்ரீவில்லிபுத்தூர் - வடபத்திர சயனம்


திருமாலின் சயனங்கள் 10 வகைப்படும். அவைகள்:


1. ஜல சயனம்
2. தல சயனம்
3. புஜங்க சயனம் (சேஷசயனம்)
4. உத்தியோக சயனம்
5. வீர சயனம்
6. போக சயனம்
7. தர்ப்ப சயனம்
8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை)
9. மாணிக்க சயனம்
10. உத்தான சயனம்


சிதம்பரம் தலத்தில் நடராஜர் சன்னதி அருகில் கோவிந்தராஜ பெருமாள் சயன கோலத்தில் உள்ளார்.


சிவ-வைணவ ஒற்றுமையை காட்டும் இந்த சன்னதியில் உள்ள வரலாறு வருமாறு:-


கைலாயத்தில் ஒருசமயம் சிவனும், பார்வதியும் மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில் ஆனந்தமாக நடனமாடினர். நடனம் முடிந்தபோது தங்களில் யார் நன்றாக ஆடியது என அவர்களுக்குள் சந்தேகம் எழுந்தது.


பிரம்மாவிடம் தங்களின் சந்தேகத்தைக் கேட்டனர். அவரால் சரியாக தீர்ப்பு சொல்ல முடியவில்லை. எனவே இருவரும் தங்களுக்கு தீர்ப்பு சொல்லும்படி மகாவிஷ்ணுவிடம் கேட்டுக்கொண்டனர்.


அவர் தேவசிற்பியான விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு ஒரு சித்திரை சபையை அமைத்து, அதில் நடன போட்டியை வைத்துக் கொள்ளும்படி கூறினார். 


சிவனுக்கும், பார்வதிக்கும் நடனப்போட்டி ஆரம்பமானது. சிவன் தன் தாண்டவங்கள் அனைத்தையும் ஆடிக்காட்டினார். பார்வதிதேவியும் சலிக்காமல் அவருக்கு ஈடு கொடுத்து ஆடினார். ஒருவரை ஒருவர் மிஞ்சும்படி இருவரும் ஆடிக்கொண்டிருக்க இறுதியில் தன் வலக்காலைத் தூக்கி தலைக்கு மேலே நிறுத்தினார் சிவன். 


பார்வதியால் காலைத் தூக்கி ஆட முடியவில்லை. எனவே, சிவனே வெற்றி பெற்றதாக அறிவித்தார் மகாவிஷ்ணு .


பின் சிவன் இங்கு நடராஜராகவே எழுந்தருளி, மகாவிஷ்ணுவையும் இங்கேயே தங்கும்படி கூறினார். விஷ்ணுவும் பள்ளிகொண்ட கோலத்தில் தங்கினார். சித்திரையில் 10 நாட்கள் வசந்த உற்சவம் மற்றும் கஜேந்திர மோட்ச விழா. 


பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. மகாவிஷ்ணுவின் நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மா நான்கு முகங்களுடன் அமர்ந்த கோலத்தில்தான் இருப்பார். ஆனால், இங்கு வித்தியாசமாக நின்ற கோலத்தில் இருக்கிறார். பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமான இங்கு மகாவிஷ்ணு ஆகாயத்தை பார்த்தபடி இருப்பது சிறப்பு.


இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சாத்வீக விமானம் எனப்படும். உற்சவர் தேவாதிதேவன் தாயார்களுடன் அமர்ந்த கோலத்திலும், மற்றொரு உற்சவர் சித்திரக்கூடத் துள்ளான் சுவாமியின் பாதத்திற்கு அருகில் நின்ற கோலத்திலும் இருக்கின்றனர். சித்ரசபை எனப்படும் இக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு அருகிலே கோவிந்தராஜப் பெருமாள் கொடிமரத்துடன் தனிக்கோயில் மூலவராக இருக்கிறார். 


பெருமாள் சன்னதிக்கு முன் மண்டபத்தில் நின்று பார்த்தால் நடராஜர், கோவிந்தராஜர் மற்றும் அவரது நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மா ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம்.


இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. கவேரன் எனும் கலிங்க நாட்டு அரசனுக்கு லோபமுத்திரை எனும் மகள் இருந்தாள். லோபமுத்திரையை திருமணம் செய்து கொண்ட அகத்தியர் அவளை காவிரி நதியாக மாற்றினார். 


அந்நதியில் தினமும் நீராடிய கவேரனும் அவன் மனைவியும் தங்கள் மகளிடம், முக்தியடைய வழி கேட்டனர். அவர்கள் முன் தோன்றிய காவிரி, “” தில்லைநகர் சென்று பெருமாளை குறித்து தவம் செய்து வந்தால் அவர் தரிசனத்தால் முக்தி கிடைக்கும்,’’ என்றாள்.


அதன்படி கவேரனும், அவன் மனைவியும் இத்தலத்திற்கு வந்து தவம் இருந்தனர். அவர்களுக்கு மகாவிஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பாற்கடலில் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தந்து மோட்சம் கொடுத்தார்.


எனவே இத்தலத்தில் நடராஜர் மட்டுமின்றி கோவிந்தராஜ பெருமாளும், நாம் முக்தி பெற அருள்வது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


ஓம் நமசிவாய 


ஓம் நமோ நாராயணணாய 


பக்தியுடன் மோகனா  செல்வராஜ்